Wednesday, April 27, 2016

ஒரு ஷூவின் கதை


இங்கே ஒவ்வொரு குளிர்காலத்திலும் பனியில் சறுக்கி விழுதல் என் வாடிக்கை. மாணவியாக இருந்த ஆறுவருடமும் சாப்பாட்டுக்கே சிங்கி அடிக்கவேண்டியிருந்தது. அடியில் முட்கள் வைத்த ஷூ வாங்கவேண்டுமென்கிற என் பலநாள் கனவு வேலை கிடைத்து இவ்வாரம்தான் நிறைவேறியது. எல்.எல். பீன் இணையதளத்தில் ”டோஸ்டி ஷூ” என்று விளம்பரம் செய்திருந்தான். சுளையாக நூத்துப்பத்து டாலர். இன்று காலை அணிந்த முதல் மணி நேரத்தில் என் பாதம் சுடச்சுட வெங்காய பஜ்ஜி. அலுவலகத்துக்குச் சென்றவுடன் முதல்வேலையாக ஷூவைக் கழட்டி பிய்த்துத் தின்றேன். 

மலைப்பாம்பு

 தினத்தந்தியில் அந்த மலைப்பாம்பையும் ஒரு பெண்ணையும் பற்றிப் போட்டிருந்தது. பத்தடி நீளம், முக்காலடி தாட்டி. கரும்பச்சை மஞ்சள் வளையங்கள் தோல் அலங்காரம் கொண்ட பாம்பு அது. சாதுப்பிராணியென்று அந்தப் பெண் வளர்த்து வந்தாள். சிலநாட்களாக சோர்ந்திருந்த பாம்பு இரவில் மெதுவாக ஊர்ந்து அந்தப் பெண்ணருகே அவள் படுக்கையில் நெருங்கிப் படுத்துக்கொண்டதாம். படுக்கையென்பதால் இங்கே படுத்தல் வினை. பெண் மன ஆதுரத்தோடு அதை அழைத்துக் (எடுத்துக்?) கொண்டு அதன் மிருக வைத்தியரிடம் காட்டியிருக்கிறாள். சோர்வெல்லாம் ஒன்றுமில்லை, உங்களை அளவெடுத்துக்கொண்டிருக்கிறது எப்போது திங்கலாம் என்ற திட்டத்தில் இருக்கிறது என்றாராம் வைத்தியர். செய்தியைப் படித்த அன்று இரவில் படுக்கையில் படுத்தபடி பக்கத்தில் ஒருமுறை பார்த்தாள். தன்னை அளவெடுத்தால் ஒரு போடு போடவேண்டியதுதான் என்று முடிவெடுத்தபின் அவளுக்கு நிம்மதியான உறக்கம் வந்தது.

Wednesday, April 6, 2016

ஜேம்ஸ் டேட்-டின் குரங்குக்குக் கவிதையெழுதக் கற்றுத்தருவதைப் பற்றிய கவிதை பற்றிய கவிதை


ஜேம்ஸ் டேட்-டின் கவிதையில்
அந்தக் குரங்குக்கு அவர்கள் கவிதையெழுத
கற்றுக்கொடுத்தபோது
பெரிய சிக்கலொன்றும் இல்லை
குரங்கை நாற்காலியில் கட்டிப்போட்டார்கள்
ஒரு பென்சிலை அவன் கையைச் சுற்றிக் கட்டினார்கள்
(காகிதம் ஏற்கெனவே வைக்கப்பட்டுவிட்டது)
டாக்டர் புளூஸ்பைர் குரங்கின் தோளின் மேல் சாய்ந்து
அவன் காதுக்குள் கிசுகிசுத்தார்
”அங்கே அமர்ந்திருக்கையில்
கடவுளைப்போலிருக்கிறாய்
ஏன் நீ ஏதாவது எழுத முயற்சிக்கக்கூடாது?”
மன்னியுங்கள் ஜேம்ஸ் டேட்
(எனக்குத் தெரிந்த)
அந்தப் பூனைக்குட்டியை
நாற்காலியில் கட்டிப்போட்டார்கள்
மடிக் கணினியை அவள்முன் வைத்தார்கள்
நாற்காலியின் பின்னால் ஏற்கெனவே
வந்துநின்றுவிட்ட வாசகர்
அவளிடம் கோரிக்கை வைத்தார்
”அங்கே அமர்ந்திருக்கையில்
அச்சுஅசலாகச் சூனியக்காரி நீ
ஏதும் செய்வினை செய்யக்கூடாதா?”
பூனைக்குட்டி தட்டச்சு செய்யுமென்பது
உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்?
(James Tate, "Teaching the Ape to Write Poems")

Sunday, April 3, 2016

எழுத்து


போட்ட வட்டத்திலேயே
உங்கள் கடவுள்களையும் தூக்கிக்கொண்டு
இப்படி எத்தனை சுற்றுகள் 
ஓடப்போகிறீர்கள்?
வட்டத்தைச் சதுரமாக்குதல்
கண்கட்டிப் பாம்பாக்குதல்
எத்திக் கலைத்தல்
ஒன்றும் சுவாரசியமில்லை
வட்டத்தை வழித்தெடுத்து
சுண்டிவிரலால் ஒரு சுண்டு
சுருளாகி எட்டுகள் சுழன்று
ஆட்டம் ஆடுவோம்
பூமியை பால்வெளியை
தொட்டுத் தொட்டு

Friday, April 1, 2016

ஒரே போடு


ஒரு மனம் ப்ளீஸ்
கடனட்டைகளில்
சாம்பார் ருசியில்
மனங்களில்
மண்டையோட்டில்
ஒரு மனம் ப்ளீஸ்
(பொடிப்பொடியாகவாவது)
காலம் கடந்தும்
பிணம் (என்றால்)
பூக்களின் கெட்டவாசனை
யூகங்களின் கொடுநிழலில்
ஓடிக்கொண்டிருத்தல்
சதுரமான மனம் போலிஸ்
முழுவட்டமான மனம் தாய்மை
கோணலான மனம் நோய்
வரையறைகளுக்கு அப்பால்
சுயபெருமித மனம்
கலகம் ஒரே புனைவுச் சிக்கு
ஆயிரமாயிரம் எண்ணங்களில் மனம்
கடவுளாக சிலைத்துவிட்டது
நேர்த்திக்கடன்களைக்
கோருகிறது கவிதையிலும்
என் கைகள் சுத்தியலைத் தேடுகின்றன
ஒரே போடு