Saturday, March 5, 2011

ஒரு காதல் கவிதை

பகல் முழுக்க பச்சைவெளி
அறையோ நீலங்களின் வானம்
உன் அருகாமை கடல்களைச் சாடி வரும்பொழுது
உப்பையும்விடச் சுவைகோரும் உன் உதடு
இல்லைகள்
உரமாகி வளர்த்த
ஒவ்வொரு நொடிப்புல்லிலும்
அகல அகலத்
திறக்கும் வாசல்கள்
புல்லின் இழைகளைவிட
நெருங்கி நெருங்கிப்
பின்னிக்கொள்ள
இடம் மாறி அடையாளம் குலையும்
நீயும் நானும்.
கலவிமுடிந்து சோம்பல்முறிக்கையில்
மூடிப்படர்ந்திருக்கும் நீலப்பச்சை
நம் தோல்
என்றும் அறிந்துகொள்வோம்.

4 comments:

கோநா said...

பெருந்தேவி, "இல்லைகள்" உரமாகி வளர்த்த
-(அருகில்)வேறு யாருமில்லை, வெளிச்சமில்லை,ஆடைகள்இல்லை,
அச்சமில்லை,வெட்கமில்லை,கூச்சமில்லை,அருவெறுப்பு இல்லை... இல்லையா? :)

"கலவிமுடிந்து சோம்பல்முறிக்கையில்"
-கலவி, களைப்பு, உறக்கம், விழிப்பு, அப்புறம் தானே சோம்பல் முறிப்பு???

Perundevi said...

நன்றி கோநா....இல்லைகளை நீங்கள் புதுவிதத்தில் அர்த்தப்படுத்துகிறீர்கள்.

//"கலவிமுடிந்து சோம்பல்முறிக்கையில்"
-கலவி, களைப்பு, உறக்கம், விழிப்பு, அப்புறம் தானே சோம்பல் முறிப்பு???//
ஆனால் களைப்பும் உறக்கமும் ஒருவகையில் கலவியின் பகுதி. ஏதும் சிந்திக்கத் தோன்றுதல் அபூர்வமாக நேர்வது. சோம்பல்முறித்தல் அடுத்த விஷயங்களுக்கான ஒரு நகர்வு என்பதுபோல தோன்றுகிறது.

கோநா said...

"களைப்பும் உறக்கமும் ஒருவகையில் கலவியின் பகுதி. ஏதும் சிந்திக்கத் தோன்றுதல் அபூர்வமாக நேர்வது. சோம்பல்முறித்தல் அடுத்த விஷயங்களுக்கான ஒரு நகர்வு என்பதுபோல தோன்றுகிறது."

ஆம் பெருந்தேவி, நீங்கள் சொல்வதும் ஏற்றுக்கொள்வது போல் இருக்கிறது.

anujanya said...

"மொழியின் கொதிநிலை கவிதை" க்குப்பின் மற்றொரு அபார வரி "சோம்பல்முறித்தல் அடுத்த விஷயங்களுக்கான ஒரு நகர்வு"

'நீலங்களின் வானம்' தரும் வசீகரத்திலிருந்து வெளிவர முடியவில்லை. நல்லா இருக்கு பெருந்தேவி.