Tuesday, February 8, 2011

புதிய கவிதைகள் சில

அலகிலா

எங்குமிலாத எங்கும்
எதுவுமிலாத எதுவும்
பெற்ற உற்ற பரிபக்குவமாய்
ஒன்றிலாத ஒரு சுவை துலங்கும்
இனித்தும் இனிப்பற்றும் இன்னமும்.

**^**

நேயம்

யாரையும் பிடிக்காத என்னை
யாரையும் பிடிக்கும் ஓர் உலகு துரத்துகிறது.
சக்கரைக்குவியலில் மூச்சுமுட்டி
அழுந்திக் கிடக்கிறது ஓர் எறும்பு.

**^**

சா அவா

கண்ணொடு கண்ணொத்து சொல்லொடு சொல்லொத்து
உடலற்று உணர்வற்று இருளற்று பழியற்று
புள்ளியில் புள்ளியில் புள்ளியிலும் புள்ளியிலா
கிடக்கும் கடக்கும் உள்ளும் வழியும்.

**^**

விட்ட குறை

அறுபட்டதென்ன விடுபட்டதென்ன
ஒன்றாத சுவைக்கு ஓராயிரம் நாக்கு.

**^**

தனித்து

நெளிவிலும் சுழிவிலும்
நேரம் தொலைத்தும்
பார்வை தப்பியும்
நினைவற்ற ஒருவழியில்
நின்றும் நிற்காமலும்
ஓட்டமாய் நகர்கிறது
சின்னஞ்சிறு
மணி.

**^**

ஊரோடொத்து

எடுபடா எண்ணத்துக்கும் தொடுபடா வண்ணத்துக்குமிடையே
ஏன் ஓடோடுகிறாய்
கொள்கையும் சுகமில்லை கோலமும் நித்தியமில்லை.

**^**

4 comments:

கார்த்திக் பாலசுப்ரமணியன் said...

கவிதைகள் மிக அருமை.

Raja said...

//சக்கரைக்குவியலில் மூச்சுமுட்டி
அழுந்திக் கிடக்கிறது ஓர் எறும்பு//

ஏனோ தெரியவில்லை...தங்களின் ஆடியற்ற ஆடியில்- கவிதையை நினைவுபடுத்தின இந்த வரிகள்...

Perundevi said...

ராஜா, ஆடியற்ற ஆடியில் கவிதையில் ஆளற்ற ஒற்றைக் கட்டில் வெறுமை. இங்கோ நெருக்கத்தின் மூச்சுத்திணறல். எதிர்-எதிர் என்பதால் நினைவில் வந்திருக்கலாம்.

கோநா said...

பெருந்தேவி,
அலகிலா, சாஅவா, விட்டகுறை ஆகிய கவிதைகளில் தெறிக்கும் ஆழமான பார்வையும், பற்றற்ற தன்மையும் உண்மை என்பதை தாண்டி ஞான பார்வை போல் செறிவாய் உள்ளது.
நேயம் கவிதையில் யாரையும் பிடிக்காத கவிதை சொல்லிக்கு சர்க்கரையை விரும்பும் எறும்பு உவமானம் சரியாய் பொருந்தாதது போல் தோன்றுகிறதே, என் பார்வை சரியா?
சாஅவா கவிதையில் உடலற்று, உணர்வற்று சரி, ஏன் உடனே இருளற்று, பழியற்று? எனக்கு புத்தரின் நினைவு வருகிறது, உடலற்று, உணர்வற்று ஞானம் அடைந்தபின் அக இருள் மற்றும் குடும்பத்தை தவிக்க விட்டுவிட்டவன் என்ற பழியும் அற்றுவிட்டது என்பது போல்.
தனித்து என்னும் கவிதையில் சின்னஞ் சிறு மணி என்பது சிறிய கடிகாரமா இல்லை சிறு மணித்துளியா?