Saturday, October 2, 2010

உலோக ருசி

என்னுடைய மூன்றாவது கவிதைத் தொகுப்பு அச்சில் இருக்கிறது. டிசம்பரில் வெளிவருகிறது. வலைப்பூவில் இருக்கும் பெரும்பாலான கவிதைகள் அதில் இடம்பெறுகின்றன. கவிதைத்தொகுப்புகளை வாங்கி வாசிப்பவர் தமிழ்ச்சூழலில் குறைவு. இதில் வலைப்பூவில் கவிதைகள் விரல்நுனியில் கிடைக்கும்போது, புத்தகத்தை வாங்கி வாசிக்கும் ஆர்வம் குறைய நிறைய சாத்தியம் இருக்கிறது. ஆகவே, சிலபல கவிதைகளை வலைப்பூவிலிருந்து நீக்கியிருக்கிறேன். நண்பர்கள், குறிப்பாக பதிவுகளுக்குப் பின்னூட்டமிட்டு உரையாடியவர்கள், புரிந்துகொள்ள வேண்டுகிறேன்.

நீக்கப்பட்ட கவிதைகளின் பின்னூட்டங்களை நீக்க மனமில்லை, அது தேவையில்லை என்றும் நினைக்கிறேன். கொஞ்ச காலத்துக்கு அந்தரத்தில் மறைந்த கவிதைப்பிரதிகளைப் பற்றிய உரைகளாக அவை நிற்கும். அதே நேரத்தில், இனி அவற்றை வாசிப்பவர்களுக்கு தொடர்புடைய கவிதையைத் தேடும் ஆர்வம் பெருகலாம். ...hide and seek.....

புதிய கவிதைகள் பதிவில் தொடரும். நண்பர்கள் தொடர்ந்து தரும் ஊக்கத்துக்கும் உற்சாகத்துக்கும் நன்றி.

பெருந்தேவி

2 comments:

Raja said...

இடுகைகளை இன்னும் முழுதாய்ப் படித்துமுடிக்கவில்லை.... படித்தவரைக்கும் எனக்கு ரொம்பவும் புதியதாக இருக்கிறது...பிடித்திருக்கிறது... நான் சிலாகித்திருந்த வெளிகளுக்கப்பாலும் தமிழெழுத்துலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது என்பது தாமதமாக எனக்கு விளங்குகிறது...என் வாசிப்பை இன்னும் பரந்துபட்டதாக ஆக்கிக்கொள்ளும் வாய்ப்பையும் அனுபவத்தையும் தந்திருக்கின்றன தங்களின் படைப்புகள்...அகநாழிகை,ஜமாலன் லியோ என இன்னும் பல எழுத்து வாசல்களையும் திறந்துவிட்டிருக்கின்றன... கருத்து முரண்கள், காரசாரமான விவாதங்கள், புரிதல்கள், அதனைத் தொடர்ந்தெழும் அன்பு பரிமாற்றங்கள் என நெகிழ்வாகவும் இருக்கிறது...தங்களின் மூன்றாவது கவிதை தொகுப்பை கண்டிப்பாக வாங்கிப் படிக்கவேண்டும் என்ற முனைப்பும் தோன்றிவிட்டது... முதலிரண்டு தொகுப்புகள் எங்கே வாங்கக் கிடைக்கும்? தொடர்ந்து வாசிக்கிறேன்... புது வாசிப்பனுபவத்திற்கு நன்றிகள்...

Raja said...

இக்கடல் இச்சுவை படித்துக்கொண்டிருக்கிறேன்...தங்கள் வலை வளாகத்தில் நான் ரசித்த சிறுவன் சிறுமி கவிதையே தொகுப்பின் முதல் கவிதையாகவும் அமைந்திருந்தது இன்ப அதிர்ச்சி...குட்டிச்சீதை, சபை,வயலட் பூ, அழுகுணி, இல்லையா என்ன, கண், தனிமை,அவா, தீராது,வரையறைகளை எழுதுதல்- எனக்கு பிடித்தவை(புரிந்தவை)...திரும்ப திரும்ப வாசிக்கும் பொழுது சில வரிகள் திறக்கின்றன ...தவறு...கவிதை வரிகள் திறந்தே தான் இருக்கின்றன...என் புரிதல் தாமதமாய் நிகழ்கிறது...முழுதுமாய் புரிந்தபின்னரே தங்களுக்கு எழுத நினைத்தேன்...அது தாமதமாகுமோ,நிகழுமோ தெரியவில்லை...ஆகையால் இது...தீயுறைத் தூக்கம் தேடியபடியும், மூன்றாவது தொகுப்பு எதிர்பார்த்தபடியும் இருக்கிறேன்...