Monday, June 28, 2010

68வது பிரிவு (மீள்பதிவு)

(குறிப்பு: இக்கவிதையில் வருகிற ஒருவார்த்தை லும்பினி இணையத்தளத்தில் நடைபெறும் பார்ப்பனியம் பற்றிய விவாதத்துக்கு அடித்தளம் இட்டிருக்கிறது. ஆனால், கவிதை வாசிக்கப்பட்டிருக்கிறதா என்பது எனக்கு சந்தேகமாக இருக்கிறது. கவிதையை அதனால் மீள்பதிவு செய்கிறேன். நான் மிகவும் மதிக்கும் அ.மார்க்ஸ் அவர்களின் கருத்துகளுக்கும் எதிர்வினை செய்ய பிறகு முயற்சிக்கிறேன். நாளை கிளம்பி சென்னை வருகிறேன். பயணத்தின் இருநாட்களில் பின்னூட்டம் (ஏதும் வந்தால்) தாமதித்து வெளியாகும். கவிதையின் அதன் பின்னூட்டங்களோடான முந்தைய சுட்டி: http://innapira.blogspot.com/2010/02/68_20.html நன்றி.)


கந்தசாமிக்கும் லதாவுக்கும் இது
68வது பிரிவு.
முதல் 2 தடவை
இருவரும் தற்கொலைக்கு
முயல நினைத்தார்கள்
தனித்தனியாக;
அடுத்த 8 தடவை
வாழ்த்துகளோடு குட்பை சொல்லிக்கொண்டார்கள்.
1 முறை தன் உள்ளங்கையில்
அவன் பார்க்க பிளேடால் கீறிச்சென்றாள் லதா.
இருவருக்கும் சங்கேதமான
பாடல்காட்சி வந்த டிவியை
குத்தி உடைத்தான் கந்தசாமி 1 முறை.
கண்ணீர் நனைத்த கண்ணாடி
பிரிவின் தடயச் செல்வத்தை
லதா துடைக்கவில்லை 1 தரம்.
முதல்முத்தம் கொடுத்தபோது
அவள் ஈஷிய சட்டையை
எரித்துப்போட்டான் கந்தசாமி 1 தரம்.
4 தடவை லதாவும் 1 தடவை கந்தசாமியும்
தொலையுறவில் கதறியழுது அவரவர் முன்பிருந்த
லேப்டாப்களை நனைத்துக் கெடுத்ததும் உண்டு.
கந்தசாமி அவளைப் பார்க்காமல்
ஈமெயில் மட்டும் போட்டுக்கொண்டிருந்தான்
அது 1/2.
லதா அவனைப் பார்த்தபடியே
அவனைப் பார்க்கவேயில்லை, அது இன்னொரு 1/2.
3 முறை லதா கந்தசாமியையும்
3 முறை கந்தசாமி லதாவையும்
பரஸ்பர அன்பில் சந்தேகித்துப் பிரிந்தார்கள்.
(அவன் கனவில் அனுஷ்கா அரைகுறையாய் வந்ததும்
இவள் தன் கனவில் அதை முழுசாய்க் கண்டதும்
இதில் அடக்கம்)
சந்தேகத்தை மனதில் வைக்காமல்
லதா சொல்லித்தொலைத்ததால்
கந்தசாமிக்கு பிரிய 1 வாய்ப்பு.
அப்படி அவன் பிரிந்ததால்
லதாவுக்கும் சண்டைபோட 1 வாய்ப்பு.
சேர்ந்திருந்தபோதே லதாவோடு
7 தடவை
பிரிந்துதான் இருந்தான் கந்தசாமி.
அவ்வளவு மோசமில்லை லதா.
1 தடவை இன்னொருவன்
தன்னைக்கொஞ்சியதற்காய்
2 முறை தானாகவே பிரிந்து
கந்தசாமியைத் தண்டித்தாள் மாதர் சிரோமணி.
லதா ஒரு கவிதை எழுதியதற்காக
1,
கந்தசாமி அவள் கவிதைகளைப் படிக்காததற்காக
8,
மனதில் பிரிந்திருக்கிறார்கள்.
ஒரேவழியாக அவள் தொல்லை ஒழிய
சாமியிடம் நின்று புலம்பினான் கந்தசாமி 1 நாள்,
அன்றிரவே சாமியாடி
லதா அவனை மீட்டுக்கொண்டாள்.
ஸ்தூலத்திலிருந்து சூட்சுமமாய் உறவு பயணிக்க
யாஹூ கணக்கை (அவளுக்கென தொடங்கியது)
7 முறை கந்தசாமி மூடிப்போட்டான்
போட்டிக்கு லதாவும் 6 முறை லிஸ்டில்
அவனை டெலீட் செய்து முறித்துக்கொண்டாள்.
இன்னும் சில பிரிவுகள்
அவர்களுக்கே நினைவில்லை.
68 பிரிவுக்கு ராசியான இலக்கம்,
நவக்கிரக ராசிக்கல் சோசியர்
சொல் மட்டுமே நினைவில் இருத்தப்
பிரயத்தனப்படுகிறான் கந்தசாமி.
தூதுசெல்ல புழுபூச்சியைக்கூடத்
தேடுவதாக இல்லை லதா.

69, 77, 88
அவர்களுக்காகப்
பொறுமையாகக் காத்திருக்கின்றன.
90-ல்
நிற்கும் மரணம் மட்டும்
வரிசையில்
முந்தத்துடிக்காமல் இருக்கட்டும்.

4 comments:

Unknown said...

இது ஒரு காஸ்மோபாலிட்டன் (இதற்குத் தமிழ் வார்த்தை என்னவென்று தெரியவில்லை ) பெருநகரங்கள் வாழ்க்கை பற்றிய கவிதை. முடிந்தும் முடியாத தொலைதூரத்து உறவு வருகிறது. இன்னொரு வித்தியாசம், உங்கள் மற்ற கவிதைகளில் நீங்கள் கணினி, மின்னஞ்சல் போன்ற தமிழ்ச்சொற்களை அடிக்கடி பயன்படுத்தி உள்ளீர்கள். ஆனால் மாறாக இந்தக் கவிதையில் ஆங்கிலவார்த்தைகள் இருக்கின்றன. காஸ்மோபாலிடன் உணர்வு கொடுப்பதற்கு என்று எனக்கு தோன்றுகிறது.
பிறகு ’ஈஷி’ வார்த்தை எனக்குத் தொல்லை தரவில்லை. கந்தசாமிக்கு லதா ஈஷியது பிடிக்காமல் அவளைப் பகடி செய்வது போல் வருகிறது. இதேபோல் உங்க க்ராஸ்டாக் பின்நவீனத்துவக் கவிதையில் முதல்வரியில் “இப்படித்தான் அன்னைக்கி ஆத்தில என்ன நடந்ததுனா சைக்கிள் காரு மீனுக்கில்லை காலு…” என்று தொடங்கியிருப்பீர்கள். அது பார்ப்பனச் சொல்லாடலைக் க்ராஸ்டாக் என கிண்டலடிக்கிற உத்தி என்று கவிதையை ஒழுங்காகப் படிக்கறவர்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனால், ”ஆத்தில” என்கிற வரியை வச்சிக்கிட்டு கவிதையைப் படித்து விவாதிக்காமல் ச்சும்மா பார்ப்பனீயம் என்று சல்லியடித்தால், அப்படியே அடிக்கட்டும் என்று விட்டுவிடவேண்டியது தான்.

Perundevi said...

சிங்கம்,

(பெண் சிங்கமா, இ.கோ.மு. சிங்கமா, அல்லது துரைசிங்கம் சூர்யாவா :) ? நன்றி.

ஊருக்குக் கிளம்பிக்கொண்டிருக்கிறேன். விரிவான பதில் தர இயலாது இப்போது. மன்னிக்கவும். ஒரு அவதானிப்பு மட்டும் இங்கே:
க்ராஸ்டாக் பற்றி எழுதியிருக்கிறீர்கள். பார்ப்பனியச் சொல்லாடல் மட்டுமல்ல, வேறுபல சொல்லாடல்களும்--தொலைக்காட்சி நீளத்தொடர்கள், மானாட மயிலாட, கிரிக்கெட், கடற்கரைக் காதல் உட்பட--குறுக்குச்சாலில் ஓடுகின்றன.

மேலும் பல சமிக்ஞைகள் ஓடும் பிரதியில் ஒருவர் பலபண்பாடுகளைக் காணலாம். வேறொருவர் ஒரு சொல்லை எடுத்து மேலாண்மையென்று தீர்மானிக்கலாம். வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் அவரவர் பிரதி. ஒரு எழுத்தாளராக எனக்கு வேண்டியது விவாதம், வாசிப்புக் கவனம்...மற்றபடிக்கு, தீர்ப்பை மாற்றிச் சொல்லச் சொல்லிக் கேட்பதில் எனக்கு ஈடுபாடில்லை. பிற பின்.

ILA (a) இளா said...

போன வாரம் சிறந்த பதிவு என்பார்வையில்(சிபஎபா), இந்த இடுகைய சேர்த்திருக்கேன்.

Perundevi said...

நன்றி இளா.