Wednesday, June 16, 2010

கூட்டத்தின் மேதை: சார்லஸ் ப்யூகோவ்ஸ்கி (3)

ஒரு சராசரி மனிதப்பிறவியிடம் இருக்கும்
இரண்டகமும் வெறுப்பும் வன்முறையும் அபத்தமும்
எந்தவொரு நாளும் எந்த ராணுவத்துக்கும்
வழங்கப் போதுமானது


கொலைசெய்வதில் சிறந்தவர்கள் அதற்கெதிராக உபதேசிப்பவர்களே
வெறுப்பதில் சிறந்தவர்கள் அன்பை உபதேசிப்பவர்களே
போரில் சிறந்தவர்கள் கடைசியாக சமாதானத்தை உபதேசிப்பவர்களே
கடவுளை உபதேசிப்பவர்களுக்கே கடவுள் தேவைப்படுகிறார்
சமாதானத்தை உபதேசிப்பவர்களிடம் சமாதானம் இல்லை
சமாதானத்தை உபதேசிப்பவர்களிடம் அன்பு இல்லை


எச்சரிக்கையாக இரு உபதேசிகளிடம்
எச்சரிக்கையாக இரு அறிந்தவர்களிடம்
எச்சரிக்கையாக இரு எப்போதும் புத்தகம் படிப்பவர்களிடம்
எச்சரிக்கையாக இரு வறுமையை வெறுப்பவர்களிடம் வறுமைக்காகப் பெருமைப்படுபவர்களிடமும்
எச்சரிக்கையாக இரு உடனே புகழ்பவர்களிடம் ஏனெனில்
அவர்கள் பதிலுக்குப் புகழ்வதை எதிர்பார்ப்பார்கள்
எச்சரிக்கையாக இரு உடனே தணிக்கை செய்பவர்களிடம் ஏனெனில்
அவர்கள் தமக்குத் தெரியாததிடம் அஞ்சுபவர்கள்
எச்சரிக்கையாக இரு தொடர்ந்து கூட்டத்தைத் தேடுபவர்களிடம் ஏனெனில்
அவர்கள் ஒன்றுமேயில்லை தனியாக
எச்சரிக்கையாக இரு சராசரி ஆணிடம் சராசரி பெண்ணிடம்
எச்சரிக்கையாக இரு அவர்கள் அன்பில் ஏனெனில்
சராசரி சராசரியைத் தேடுவதே அவர்கள் அன்பு


ஆனால் அவர்களின் வெறுப்பில் மேதைமை இருக்கிறது
அவர்களின் வெறுப்பில் இருக்கும் மேதைமை
உன்னைக் கொல்லவும் போதுமானது
தனிமையை விரும்பமாட்டாதவர்களாக
தனிமையைப் புரிந்துகொள்ளவும் மாட்டாதவர்களாக
அவர்களிடமிருந்து வேறுபட்ட எதையும்
அழிக்க அவர்கள் முயல்வார்கள்
கலையை உருவாக்க முடியாதவர்களாதலால்
கலையைப் புரிந்துகொள்ள மாட்டார்கள் அவர்கள்
படைப்பாளிகளாகத் தங்கள் தோல்வியை
உலகத்தின் தோல்வியாகமட்டுமே பார்ப்பார்கள் அவர்கள்
முழுதாக நேசிக்க முடியாதவர்களாதலால்
உன் நேசத்தைக் குறைபட்டதாக நம்புவார்கள் அவர்கள்
மேலும் அப்போது அவர்கள் உன்னை வெறுப்பார்கள்
மேலும் அவர்களின் வெறுப்பு நேர்த்தியாக இருக்கும்

ஒரு மின்னும் வைரத்தைப்போல
ஒரு கத்தியைப்போல
ஒரு மலையைப்போல
ஒரு புலியைப்போல
விடமருந்தைப்போல

அவர்களின் ஆக அருமையான கலை.



(குறிப்பு: மொழிபெயர்த்து செய்யப்படும் கவிதைகளின் முதல்பிரதிகளே இவை, இன்னும் செம்மைசெய்ய வேண்டியிருக்கிறது)

1 comment:

Robin said...

அருமை.