Saturday, April 10, 2010

பெண்-உடல்-மொழி: சிரிப்பும் கண்காணிப்பும் (1)

பெண் உடல்மொழி என்றால் என்ன? அதன் தத்துவ, வரலாற்றுப் பின்னணிகள் என்ன? பெண்ணுடலை விவரிக்கும் விரிக்கும் மொழி பெண்ணுடல் மொழியா? அல்லது பெண் உடலின் சைகைகள் சமிக்ஞைகள் நடவடிக்கைகள் செயல்பாடுகள் போன்றவை மூலம் அவள் சொல்வதாக புரிந்துகொள்ளப்படுவது பெண்ணுடல் மொழியா? உடலும் மொழியும் ஒன்றா, வெவ்வேறா? உடலை மொழி பிரச்சினையில்லாமல் அப்படியே பிரதிநிதித்துவப்படுத்துமா? அப்படி பிரதிநிதித்துவப்படுத்த முடியுமா? புரட்சி என்று உச்சரித்தால் புரட்சியாகி நடந்துவிடுமா? இட்லி என்று எழுதிய காகிதத்தை உண்டால் பசி தீர்ந்துவிடுமா?

நிறைய கேள்விகள் முன்னே நிற்கின்றன. சிலவற்றை கேட்டு எழுதி புரிந்துகொள்ள முயற்சிக்கலாம் என்பதே (செம்மைசெய்யப்படாத) இப்பதிவின் நோக்கம்.

”உடலை எழுதுதல்” என்பது பெண்ணியங்களின் முன்னெடுப்பில் ஒரு குறிப்பிட்ட வரலாற்றுத்தருணத்தில் நிகழ்கிறது. இவ்வரலாற்றுத்தருணத்துக்கும் “புத்துலகை உருவாக்குதல்” என்கிற கருத்தாக்கத்துக்கும் கனவுக்குமான தொடர்பை பெண்ணியல் ஆராய்ச்சியாளர்கள், குறிப்பாக செசிலி லிண்ட்சே போன்றவர்கள் விவரிக்கிறார்கள். ”மாற்று உலகங்கள்,” “கடந்து முன்செல்லல்,” ”பெண்ணிய எதிர்காலங்கள்” போன்ற கற்பனைகளும் கனவுகளும் பெண்ணியப் பேச்சுகளில் எழுத்துகளில் உருவானதையும், இதில் ஒரு முக்கியமான அங்கமாக ”உடல் எழுத்து” தொடங்கியதையும் பேசுகிறார்கள். குறிப்பாக ப்ரெஞ்ச் பெண்ணியத் தத்துவச் சிந்தனைப்போக்கில் ஹெலன் சிக்ஸு, மோனிக் விட்டிக் போன்றவர்களால் எடுத்தாளப்பட்ட கருத்தாக்கம் “உடல் எழுத்து.” “உடல் எழுத்து” என்பதற்கும் புத்துலகை உருவாக்கும் கருத்தியலுக்கும் இருக்கிற தொடர்பு யோசிக்க வேண்டிய ஒன்று.

பெண்ணியப் புத்துலகம் எப்படி இருக்கவேண்டுமென்பதைப் பற்றிக் கருத்துவேறுபாடுகள் கொண்ட, விவாதித்த விட்டிக், சிக்ஸு இருவருமே ஒருவிஷயத்தில் ஒரேநிலைப்பாடு கொண்டவர்கள். அது மொழிபற்றிய அவர்கள் பார்வை. “கடந்த காலத்தைப் பெற்று அல்லது கடத்தித்தருகிற மொழியே, கலாச்சாரச் செயல்பாடுகள், கருத்தியல் வடிவங்களுக்கான அடிப்படையாக இருக்கிறது” என்று அவர்கள் நினைத்தார்கள். ஆகவே, மொழியும் எழுத்துமே நிகழ்காலத்தைக் கேள்விகேட்கும், புத்துலகை உருவாக்குவதில் முதன்மைப்பட வேண்டும் என்றும் நம்பினார்கள்.

குறிப்பாக இங்கே ஹெலன் சிக்ஸு-வின் கோட்பாட்டை அதன் பிரச்சினைகளைப் பார்க்கலாம். பெண்தன்மையும் ஆண் தன்மையும் உடல் அடிப்படையிலிருந்து பெறப்படுவதாக சிக்ஸு வாதாடினார்: “பெண்மை சந்தேகத்துக்கிடமின்றி, உடலிலிருந்துதான் வருகிறது. உடற்கூற்றியல், உயிரியல் வித்யாசங்களிலிருந்து, பெண்களை ஆண்களிலிருந்து பெரிதாக வேறுபடுத்தும் உந்துதல்களின் கட்டமைப்புகளிலிருந்து அது பெறப்படுகிறது.” ஆணுக்கும் பெண்ணுக்குமிடையிலான உறுதியான வித்யாசங்கள் என்று அவர் நம்பியதை அவருடைய Castration or Decapitation? (1981) என்ற கட்டுரையில் சீனக்கதை ஒன்றைச்சொல்லி நிறுவுகிறார். போர்வீரருக்கான உபாயங்களைக் கற்றுத்தரும் சுன் ட்ஸே (Sun Tse) கையெட்டிலிருந்து எடுத்தாளப்படுகிறது இந்தக்கதை. முன்னொருகாலத்தில் நடந்ததாகவும் சொல்லப்படுகிறது.

சீன அரசன் ஒருவன் தனது ஜெனரல் சுன் ட்ஸேக்கு ஒரு கட்டளையிடுகிறான். ”போர் உபாயங்கள் தெரிந்தவன் நீ, யாருக்கும் பயிற்சி கொடுத்து சிறந்த வீரனாக மாற்றத் தெரிந்தவனும் நீ, என் மனைவிகளை (நூற்றி எண்பது) போர்வீரர்களாக மாற்றிக்காட்டு” என்கிறான். ஆணையை ஏற்ற சுன் ட்ஸே அரசனின் மனைவிகளை இருவரிசைகளாக நிறுத்துகிறான். இருவரிசைகளிலும் அரசனுக்கு மிகவும்பிடித்த இரு ராணிகளை முதலில் நிறுத்துகிறான். பின் அவர்களுக்கு முரசடிப்பதைச் சொல்லித்தருகிறான். இரண்டு அடிகள்—வலது பக்கம், மூன்று அடிகள்—இடது பக்கம், நான்கு அடிகள்—திரும்பி பின்பக்கம் முன்னேற வேண்டும். ஆனால் இந்தப் பாடத்தைக் கற்றுக்கொள்வதற்கு பதிலாக பெண்கள் சிரித்துக்கொண்டிருந்தார்கள். ஜெனரல் சொல்லிக்கொடுத்தபடி இருக்கிறான். பெண்களோ சிரித்தபடி இருக்கிறார்கள். பலமுறைகள் அவன் முயன்றும் பலனில்லை.

கடைசியாக தான் சொல்லிக்கொடுத்தவற்றில் ஜெனரல் தேர்வு வைக்கிறான். நியமவிதிகளின்படி, தேர்வில், போர்வீரர்களாக பயிற்சியெடுக்கும் பெண்கள் போர்வீர்ர்களாக ஆகாமல் சிரித்துக்கொண்டிருந்தால், அது கலகமாக அறியப்படும், பெண்களுக்கு அப்போது மரணதண்டனைதான் விதிக்கப்படவேண்டியிருக்கும். சிரித்துக்கொண்டிருந்த பெண்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. அரசன் உள்ளுக்குள் கொஞ்சம் கலங்குகிறான். ஒன்றா, இரண்டா, நூற்றி எண்பது ஆயிற்றே. எத்தனை இழப்பு? அரசன் இதை விரும்பவில்லை. என்றாலும் சுன் ட்ஸே கொள்கையில் குறியாய் நிற்பவன். அரசனை விடவும் அவன் ஆணை அரசமயமானது என்று தெரிந்தவன். சட்டம், முழுமொத்தமானது சட்டம். ஆணையை திருப்பிவாங்க முடியாது. அவன் மன உறுதியுடன் முன்னணியில் நிற்கும் இரண்டு ராணிகளின் கழுத்தையும் சீவுகிறான். எதுவுமே நடக்காதது போல, அடுத்த இரு பெண்கள் அவர்கள் இடங்களில் பதிலிடப் படுகிறார்கள். திரும்ப தேர்வு நடக்கிறது. இம்முறை பெண்கள் சிரிக்கவில்லை, சின்ன சப்தமும் இல்லை. சோதனை மிகச்சரியாக நடந்தேறுகிறது.

ஆண்மைக்கும் பெண்மைக்குமான சமன்பாட்டை இக்கதையிலிருந்து சிக்ஸு வடிவமைக்கிறார். ஆண்மை அல்லது ஆண்மைப் பொருளியல் என்பது நேரத்தைக் கண்காணிக்கும் விதியால்--இரண்டு அடிகள், மூன்று அடிகள், நான்கு அடிகள் என முரசால், எது எப்படி இருக்கவேண்டுமோ அப்படியிருக்க, ஒழுங்குபடுத்தப்படுகிறது. அதற்கேற்ப ஆணைகள் கற்றுக்கொடுக்கப்படுகின்றன; கற்றுக்கொடுக்கப்பட்டு பட்டு உருவேற்றப்படுகின்றன. பெண்மை அல்லது பெண்மைப் பொருளியலோ பெண்ணிலிருந்து போர்வீரனை உருவாக்கும் வலிமையால் வரலாற்றில் நிறுவப்படுகிறது. தலையைச் சீவக்கூடிய ஒட்டுமொத்த வலிமை அது. பெண்ணுக்கு வேறு தேர்வு இல்லை. வாளுக்குத் தலையைக் கொடுக்கவேண்டும். அல்லது அவள் தலை கழுத்தின் மேல் இருக்க, அவள் அவளாக இல்லாமல் இருக்கவேண்டும். முரசடிகளை கவனமாகக் கேட்காவிட்டால் தலையைக் கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும்.

சிக்ஸு-வின் சிந்தனைகளில் ஒன்றைக் கவனிக்கவேண்டும் நாம். ஒருபோதும் அவர் சதிசெய்கிற ஆண் (குழு) X பாதிக்கப்படுகிற பெண் (குழு) என்று ஒரு எளிய வாதத்தை ஆதரிக்கவில்லை. நேரத்தை ஆகவே ஒருவிதத்தில் வரலாற்றைக் கண்காணிக்கிற ஆண்களாகட்டும், தலையைக் காப்பாற்ற ஒழுங்குவிதிகளுக்குக் கட்டுப்படுகிற பெண்களாகட்டும்….இவர்கள் அனைவரையுமே சமுதாயத்தின் நியமவிதிகள் கட்டுப்படுத்துகின்றன. Code, கலாச்சாரத்திலும் சமுதாயத்திலும் நிறுவப்பட்டிருக்கிற code அவையே இங்கே முக்கியம். அவற்றுக்கே இங்கே அதிகாரம்.

(தொடரும்…)

12 comments:

leena manimekalai said...

பகிர்தலுக்கு நன்றி. அடுத்தப் பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

ஜமாலன் said...

//சிக்ஸு-வின் சிந்தனைகளில் ஒன்றைக் கவனிக்கவேண்டும் நாம். ஒருபோதும் அவர் சதிசெய்கிற ஆண் (குழு) X பாதிக்கப்படுகிற பெண் (குழு) என்று ஒரு எளிய வாதத்தை ஆதரிக்கவில்லை. //

இது ஒரு முக்கிய கவனிப்பு. பொதுவாக இரட்டை முரண்களாக செயல்படும் கருப்பு வெள்ளை என்பதிலிருந்து விலகி பிரச்சனைகளை அவதானிக்க வேண்டியது முக்கியம். இங்கு பெண்ணியம் என்பதைக்கூட இத்தகைய பைனரியாக அனுகும் போக்கே உள்ளது. ஆண் பெண் என்பது உயிரியல் சார்ந்தது என்றால் ஆண்மை பெண்மை என்பது கலாச்சாரக் கட்டுமானமாக உள்ளது. பெண்மையை நடிப்பவளாக பெண்ணும் ஆண்மையை நடிப்பவனாக ஆணும் இருக்கும்படி இந்த கண்காணிப்பு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இங்குதான் நீங்கள் குறிப்பிடும் code என்பதன் செயல்பாடு முக்கியத்துவம் பெறுகிறது.

//பெண்தன்மையும் ஆண் தன்மையும் உடல் அடிப்படையிலிருந்து பெறப்படுவதாக சிக்ஸு வாதாடினார்//

இது ஒரு விவாதத்திற்குரிய கருத்தாக கருதுகிறேன். பெண்தன்மை? அல்லது ஆண்தன்மை? என்பது என்ன அதை வரையறுப்பதற்கான வடிவங்கள், விதிமுறைகள், செயல்பாடுகள் என்ன? என்கிற கேள்வியும் வருகிறது. மீண்டும் மீண்டும் நாம் பெண்ணுடல் ஆணுடல் என்கிற சாராம்சவாதத்தில் சிக்கிக் கொள்ளாமல் இந்த பிரச்சனைகளை கொண்டு செல்வது அவசியம்.
உடல்மொழி பற்றியும் பெண்-உடல்-மொழி குறித்தும் ஆழமான உரையாடலுக்கான ஒரு முன் முயற்சியை துவக்கியிருக்கிறீர்கள். இன்றை சூழலில் இந்த உரையடல் முக்கியத்துவம் வாய்ந்தது. பெண்-உடல்-மொழி என்கிற கருத்தாக்கமே குழப்பியடிக்கப்பட்ட சூழல் நிலவுகிறது. இங்கு நாம் கவனிக்க வேண்டிய விடயம், பாலியல்-மையம் கொண்டதாக மட்டுமே இவை இங்கு பிரதானப்படுத்தப் படுகின்றன. இவ்வெழுத்து அதை தாண்டிய வகையில் காத்திரமான உரையாடலை கொண்டு செல்லும், செல்லவேண்டும் என்பதே எனது அவா

vasu said...

இம்மாதிரியான பெண்ணியஆய்வுக்கட்டுரைகளை (கோட்பாட்டு ரீதியாக) வரவேற்கிறேன். கடந்த 40 ஆண்டுகளில் தெரிதாவின் கோட்பாடுகள் தத்துவம்/இலக்கியம் மீது மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியதை நீங்கள் அறிவீர்கள். குறிப்பாக இவருடைய deconstruction and decomposition உத்திகள் ( கட்டுடைத்தல் மற்றும் சிதைவாக்கம்) பெண்னியலுக்கு தீவிரமாக உட்படுத்தி பலர் ஆய்வு செய்திருக்கிறார்கள். என்னை பொறுத்த வரையில் ஹெலன் சீக்ஸூ, கேத்தே அக்கர் போன்றவர்களின் கோட்பாடுகள் காலாவதியாகிவிட்டன. தெரிதா spurs: nitezhe's styles என்ற முக்கிய நூலில் the undecideability of language பற்றி அபாரமாக எழுதி ஒவ்வொரு வார்த்தைக்கும் பல அர்த்தங்களை நீட்ஷே கூறும் ஜெர்மானிய மொழிக்கும் மற்றும் அதற்கு இணையாக ஃபிரென்சிலும் ஆங்கிலத்திலும் பல உதாரணங்கள் மூலம் நிறுவுகிறார்.(spur என்ற வார்த்தைக்கு வெவ்வேறு அர்த்தங்கள் உள்ளன) குறிப்பாக பெண் மற்றும் குறிப்பிட்ட வார்த்தைகள் சுட்டும் பிரேத்கேய பெண் கருத்தாடங்களை.. masculine and logocentric சூழலில் தெரிதா சுட்டும் differance மொழியில் நடைபெறாததை எழுதிச்செல்கிறார். தெரிதாவின் ஆய்வு மொழியிலிருந்து வருகிறது.அதாவது மொழிதான் பெண்ணடிமைக்கு முதற்காரணம். ஆக ஹெலன் சீக்ஸு சொல்வது போல் பெண்தன்மை/ஆண்தன்மை உடலிருந்து வரவில்லை மாறாக தெரிதா சொல்வது போல் மொழியிலிருந்து வருகிறது. ஆக நான் இங்கு வலியுறுத்துவது தமிழில் பெண்ணியம் பற்றி எழுதுகிறவர்கள் தெரிதா மற்றும் லூசி இரிகாரி போண்ரவர்களின் தத்துவங்களை முன்னெடுத்து செல்லவேண்டும்.

Perundevi said...

நன்றி.

வாசு, கட்டுரையின் துவக்கத்திலேயே “பிரச்சினைகள்” இருப்பதைக் குறிப்பிட்டிருக்கிறேன். சிக்ஸு-வே சரியாக பெரும்பாலானோருக்கு (எழுத்தாளர்கள் உட்பட) அறிமுகமில்லாத சூழலில், சிக்ஸு-வின் சிந்தனைகளைச் சொல்லிவிட்டுத்தான் அதன் பிரச்சினைகளைச் சொல்லவேண்டும்.(அதுவும் குறிப்பாக தமிழ் எழுத்துச்சூழலில் உடல், உடல்மொழி என்பதெல்லாம் reify செய்து பேசப்படும்போது) கொஞ்சம் பொறுங்கள். :-)
ஒரு விஷயம், அது “காலாவதி ஆகிவிட்டது” இது “முடிந்துவிட்டது” போன்ற பிரயோகங்கள் அறிவுசார் விவாதங்களில் அவசியமில்லை என்று நினைக்கிறேன். சிக்ஸுவோ ஏன் க்றிஸ்தவாவோ....எந்தச் சிந்தனையாளராக இருந்தாலுமே, சிந்தனைகள் மாத்திரைகள் அல்ல எக்ஸ்பைரி டேட்ஸ் போட. :-)

vasu said...

காலாதியாகிவிட்டது என்று இறுமாப்புடன் கூறவில்லை.அந்த தொனியில் இருந்தால் மன்னிக்கவும். மாறாக நான் சொல்ல நினைத்தது ஹெலன் சீக்ஸூ, கேதே அக்கர் போன்றவர்களை பற்றி ஏற்கனவே தமிழ் சூழலில் தெரியும். மேலும் பெண்ணிய உரையாடல்கள் அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும். சீக்ஸூ,அக்கர் என்ற அறிவுத்தேக்க நிலையை தெரிதா கொண்டு உடைக்க வேண்டும்.

Kavitha said...

பெருந்தேவி, பெண் உடல் மொழி குறித்த பல்வேறு பிரச்னைகள் உழலும் சிக்கலான ஒரு காலக்கட்டத்தில் தமிழ் இலக்கிய சூழல் இருக்கிறது. உடல் மொழி குறித்த பெரும்பாலும் ஆரோக்யமற்ற, புரிதலற்ற விவாதப்போக்குகள் இருக்கும் சூழலில் உங்களின் இந்த கட்டுரை ஒரு ஆரோக்யமான விவாதத்தின் தொடக்கப்புள்ளியாக இருக்கும் என்று நம்புகிறேன். தனிப்பட்ட முறையில் தமிழில் பெண்ணிய, உடல் சார்ந்த விவாதங்கள் எட்ட வேண்டிய தளங்கள் இன்னும் என்னென்னவோ என்று நான் நம்புகிறேன். நாம் இன்னும் உறுப்புகளின் மயக்கத்தில் உழன்றுக்கொண்டிருக்கிறோம்... உங்கள் கட்டுரை, தளங்களை விரிவுப்படுத்தும்.தொடர்ந்து எழுதுங்கள்.

Rajan Kurai Krishnan said...

வாசுவின் பின்னூட்டம் மிகவும் குழப்பமான புரிதல்களை ஏற்படுத்தும் என நினைக்கிறேன். உடலையும், மொழியையும் எதிரெதிராக நிறுத்தி கருத்துமுதல்வாதமா, பொருள்முதல்வாதமா என்பதுபோலாக்கி தெரிதாவை மொழியின்பால் தீர்ப்பளித்தவராகக் காட்டுவது தத்துவத்தளத்தில் மிகுந்த தெளிவின்மையை ஏற்படுத்திவிடும். உடல், மொழி இரண்டுமே வெவ்வேறு வகையான குறிகள்,வெவ்வேறு சந்தர்ப்பத்தில் வெவ்வேறு குறி வகைமைகள் என்பதை பெருந்தேவியின் தொடர் வாசு உள்ளிட்ட நண்பர்களுக்கு தெளிவுபடுத்தும் என எதிர்பார்க்கிறேன்.தெரிதா போன்ற மிக சிக்கலான சிந்தனையாளர்களை அவர்களை உருவாக்கிய தத்துவப் பின்புலத்தை பொறுமையாகக் கற்காமல் புரிந்துகொள்வது கடினம். அவசரமான பதிவுகளால் அவரைப் போன்றவர்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்துவது வருந்தத்தக்கது.

vasu said...

'ராகு' பகவான் உள்ளிட்ட நண்பர்களுக்கு ஸத்ஸம்ப்ரதாய வரருசி வாக்ய கணித சாஸ்திரப்படி விக்ருதி வருஷ கணிப்புகளையும் பரிகாரங்களையும் பரிந்துரைப்பது வாசு உள்ளிட்ட நண்பர்கள்.
ஜென்ம ராசியில் ராகு,சுக ஸ்தானத்தில் குரு,பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் புதன்,குண ஸ்தானத்தில் சூரியன்,சம்தம ஸ்தானத்தில் சுக்கிரன்,கேது,அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய்,ஜீவன ஸ்தானத்தில் சனி.10ல் சனி,ராகு 1ல்,கேது 7ல்,செவ்வாய் 8ல்.10ல் சனியும்,1ல் ராகுவும் இருப்பதால் தடுமாற்ற்ம்,சத்ருபயம்,விசனம் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.தற்போது தமிழகத்தில் மையம் கொண்டிருக்கும் ராகு பகவான்,அடையாள சிக்கலில் தப்பிக்க மார்க்கமுற்று அவ்வபோது சக நண்பர்களை தன் மாதிரியே சிந்திக்க அழைப்பு விடுத்து தத்துவ சிந்தனையை மீட்டெடுக்கும் 'பெரிய காரியத்தில்' இவ்வருட சித்திரை மாதத்திலிருந்து செயல்படுவார்.செவ்வாய் 8ல் இருப்பதால் ராகுவுக்கும்,மற்றும் சக‌ சேர்க்கையான் தன அதிபதி சுக்கிரனக்கும் தமிழகத்தில் யார் எழுதுவது/எழுதக்கூடாது மற்றும் எப்படி எழுதுவது/எழுதக்கூடாது என்ற அதிகாரம் விரைவில் கைகூடும்.கேது 7ல் இருப்பதால் திருவாளர் தெரிதாவின் புத்தகம் தமிழில் மொழியாக்கம் ராகு பகவானால் கூடிய விரைவில் நடந்தேரி,வாசு உள்ளிட்ட நண்பர்களுக்கு கற்ப்பிப்பார்.வைகாசி மாதம் முதல் பங்குனி வரை விஜய்,சூர்யா,விக்ரம் நடித்த திரைப்படங்களை ஆய்வு நோக்கில் பார்ப்பது விசேஷம் மற்றும் தேக ஆரோக்கியத்திற்கும் நல்லது.பார்த்திபன் படத்திற்கு பொழிப்புரை எழுதும் வாய்ப்பும் கிட்டும்.
பரிகாரம்‍_ இஷ்ட தெய்வத்தை நினைத்து பிரதி வாரம் சனிக்கிழமை தோறும் முன்று முறை நெய்விளக்கு ஏற்றினால் சகல கஷ்டங்களும் நீங்கி,தான் நினைத்த காரியங்கள் தமிழ்கூற் நல்லுலகத்திற்கு விரைவில் கைகூடும்.
தாசன்,
வாசு உள்ளிட்ட நண்பர்கள் .

Perundevi said...

வாசு, என்ன ஆயிற்று? ஏன் இப்படி எழுதி உள்ளீர்கள்? வாசிக்க உங்கள் பின்னூட்டப் பாணி கிண்டலாக வந்திருக்கிறதுதான். இருந்தாலும் உரையாடலாக உங்கள் கருத்தை முன்வைத்தால் மற்றவர்கள் புரிந்துகொள்ள ஏதுவாகும்.
உரையாடல் புலத்தை செறிவாக வளர்த்துச் செல்லவும் அது உதவும், இல்லையா?

அன்புடன், பெருந்தேவி

கல்வெட்டு said...

//அல்லது அவள் தலை கழுத்தின் மேல் இருக்க, அவள் அவளாக இல்லாமல் இருக்கவேண்டும். //

பெருந்தேவி,
அவள் அவளாக இல்லாமல் இருக்கவேண்டும் என்று சொல்லும்போது...

அவள் சிரித்துக்கொண்டுஇருப்பதே அவளுக்கானது என்றும்... அதில் இருந்து மாறுவதே தலையைக்காக்கத் தேவை என்றும் சொல்வது போல் உள்ளது.

**

ஆணோ பெண்ணோ இதுதான் இறுதி இறைவேதம் என்பதுபோல எந்த முன்முடிவான உடல்மொழிகளும் இல்லை.

இடம், காலம் , வளரும் சூழல் தேவை போன்றவை அவர்களுக்கான உடல்மொழியை கட்டமைக்கின்றன.

ஒன்றிலிருந்து(1) மற்றஒன்றுக்கு(2) மாறுவதால் முதலில் பயிற்றுவிக்கப்பட்ட ஒன்று(1) அவளுக்கான ஒன்று அல்ல.

இப்படி இருக்க வேண்டும்...

....அவள் தலை கழுத்தின் மேல் இருக்க, அவள் புதியதை கற்றுக் கொள்ளவேண்டும். ஏன் என்றால் அவள் எப்படி இருக்க வேண்டும் என்பதை நேற்றுவரை சீன அரசனும் இன்று ஜெனரல் சுன் ட்ஸேக்கும் தீர்மானிக்கிறார்கள் ....

****

இதுதான் சரி.

//அனைவரையுமே சமுதாயத்தின் நியமவிதிகள் கட்டுப்படுத்துகின்றன.//

1.உடலுக்கான விதிகளை சமூகமே கட்டமைக்கிறது.
2.உடல் சமுகத்திற்குச் சொந்தமான ஒன்று அது எந்த சமூகத்தில் நடமாடுகிறதோ அதையொற்றி இயங்கவேண்டும்.
3.சமுதாயம் என்பது பெரும்பான்மை மற்றும் அதிகாரம் கொண்ட உடல்களால் கட்டமைக்கப்படுகிறது.

.

Perundevi said...

கல்வெட்டு அவர்களுக்கு,

கட்டுரையின் முதல்பகுதி மட்டும்தான் இது. சொல்லியிருப்பவை எல்லாம் சிக்ஸுவின் கருத்துகள். அவருக்குப் பிறகுவந்த பெண்ணியச் சிந்தனையாளர்களுக்கு அவற்றில் உடன்பாடு இல்லை. என் அடுத்த பகுதிகளில் சிக்ஸுவின் கருத்துகளின் பிரச்சினைகளை எழுதுவேன். தயவுசெய்து பொறுத்திருக்கவும். சிக்ஸுவை அறிமுகப்படுத்திவிட்டு விமரிசிக்கவேண்டும் என்பது என் விருப்பம்.
உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி.

கல்வெட்டு said...

//
சிக்ஸுவை அறிமுகப்படுத்திவிட்டு விமரிசிக்கவேண்டும் என்பது என் விருப்பம். //

Ooops :-(

மன்னிக்க வேண்டும்.. சரியாகக் கவனிக்கவில்லை. அது உங்களின் நேரடியான கருத்தோ என்று உடனடியாக எனது விமர்சனங்களை வைத்துவிட்டேன்.

சிக்ஸு அறிமுகத்திற்கு நன்றி!

வேண்டுகோள்:
ஹெலன் சிக்ஸூ போன்ற தமிழ்ப்படுத்திய பெயர்களுடன் அதன் ஆங்கில எழுத்துக்களை அப்படியே அடைப்பு குறிக்குள் போட்டால் (Helen sisco ?? ) இணையத்தில் மேலதிகத் தேடலுக்கு வசதியாய் இருக்கும்.

நன்றி !

.