Thursday, March 5, 2009

அறத்தையும் அரசியலையும் பேசுதல்: நிகழோடு/நிகழ்வோடு இடதுசாரி ஈடுபாடு

காத்ரி இஸ்மாயில் மினசோட்டா பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத்துறை பேராசிரியர். இலங்கை பற்றிய அவருடைய புத்தகம் ஒன்று, “Abiding by Sri Lanka: On Peace, Place, and Postcoloniality,” மினசோட்டா பல்கலைக்கழக வெளியீடாக வெளிவந்திருக்கிறது. தன் புத்தகத்தில் அவர், சிறுபான்மையினரின் ”எண்ணிக்கை குறைந்த” தன்னிலைக்கு இடம்தருவதாகமட்டும் ஜனநாயகம் என்பதைக் கருதாமல், ஆதிக்கமின்றி ஆனால் அதே நேரத்தில் வேறுபாடுகளையும் அமைதியையும் தக்கவைக்கக்கூடிய இடமாக அதை மறுவாசிப்புக்கு உட்படுத்தவேண்டும் என்று கூறுகிறார்.

அரசியலோடு அறத்தை இணைக்கும் தேவையைப் பேசும் அவரது இந்தக் கட்டுரை “Transcurrents”-இல் பெப்ரவரி 28, 2009 அன்று வெளியானது. இதன் தமிழாக்கம் இரு பகுதிகளில் வெளிவரும். முதல் பகுதி இதோ. (கட்டுரையைக் கடிதத்தில் சுட்டிய நண்பர் கவிஞர் வாசுதேவனுக்கு நன்றி)

இலங்கையின் இடதுசாரிகளை மனதில் வைத்து இக்கட்டுரையை காத்ரி இஸ்மாயில் எழுதியிருக்கிறார். அவர் எழுப்புகிற கேள்விகளும் எடுத்துவைக்கிற வாதங்களும் இலங்கையைப் பொறுத்து இன்றைய தமிழகச்சூழலிலும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இன்று இலங்கைத் தமிழர்களைப் பற்றிப் பேசுவதில் ஒரு சிக்கல் இருப்பதைத் தொடர்ந்து உணர்கிறேன். யாரை யார் எப்படி பிரதிநிதித்துவம் செய்து பேச முடியும் என்பது ஒரு அடிப்படையான கேள்வி. கூடவே நான் எனக்காக மட்டுமே பேச முடியும், பேசுவேன் என்றால் சுயபிரதிநிதித்துவம் என்பதைத் தாண்டிய அறம் என்று எதுவும் கிடையாதா என்பது கூடவே வரும் இன்னொரு கேள்வி. பிரதிநிதித்துவம் என்பதை கொஞ்சம் இடம்நகர்த்தி அறம்சார் சிந்தனை ஒன்றைப் பகிர்ந்துகொள்ள முடியும் என நினைப்பது ஒரு அபார நம்பிக்கைதான், இல்லையா?

பிரதிநிதித்துவத்தோடு கூடவே வரும் மற்றொரு பிரச்சினை: பேச அர்த்தம்தோய்ந்த மொழியை இழந்துவிட்டோம் என்று தோன்றுவதும்தான். இரண்டு பக்கமும் தொடர்ந்து அடிவாங்கும் ஈழத்தமிழ் மக்களைப் பற்றிய எந்த மொழிதலும், அர்த்தத்தளத்தில் வழுக்குத்தரையில் வைத்த கால் போல இலக்காக நாம் கொள்ளாத இடம் நோக்கி ஓடிவிடுகிறது. நாமே அறியாத நம் ஓட்டம் அதுவாகவே தேங்கி நிற்பது துரதிர்ஷ்டவசமாக இரண்டு இடங்களில்தாம்: ஒன்று அடிவாங்கும் தமிழர்களைப் பற்றி எதைப்பேசினாலும் அது விடுதலைப்புலிகளுக்குப் பரிந்து பேசுவதாகக் கருதப்படுவது அல்லது அவர்களின் ஆதரவாக போய்முடிவது. மற்றொன்று, விடுதலைப்புலிகளைப் பற்றிய நியாயமான விமரிசனங்கள் ஈழத்தமிழர்களை நசுக்கும் இலங்கை அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டால் சுவீகரித்துக்கொள்ளப்படுவது. நோம் சோம்ஸ்கி-யின் ”லங்கா கார்டியன்” நேர்காணலுக்கு எதிர்வினையாக நண்பர்கள் கூட்டாக வரைந்த அறிக்கைக்கு சோம்ஸ்கி அளித்திருக்கிற பதில் இந்த வழுக்குதலை இன்னும் பொருண்மையாக எடுத்துக்காட்டியது.

மொழிதலில் இந்த வழுக்கு விளையாட்டை புரிந்துகொண்டு மௌனமாக இருக்கும் என் நண்பர்கள் சிலரை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. உண்மையில், இந்தக்கட்டுரை கூட இப்படியான ஒரு விளையாட்டில் வழுக்கிக்கொண்டு போகும். என்ன செய்ய முடியும்? கைவிரித்தல் போல, எழுதுதலும் இன்னொரு செயல் என்பதைத் தாண்டி ஒன்றுமில்லை என்று சொல்லும்படியாகத் தானே இருக்கிறது சூழ்நிலை?

அறத்தையும் அரசியலையும் பேசுதல்: நிகழோடு/நிகழ்வோடு இடதுசாரி ஈடுபாடு

தமிழீழ விடுதலைப் புலிகளை முடிந்துவிட்டதாகக் கருதுவது உண்மைபோல் வேஷமிட்டுவரும் அதிகற்பனையே.”


காத்ரி இஸ்மாயில்


சே குவெரா ஒரு முறை சொன்னார்: “ஒவ்வொரு அநீதியின் போதும் அறச்சீற்றம் கொண்டு நீ நடுங்குவாயானால், நீ என் தோழர்.”

போராட்டமும் குறுக்கீடு செய்தலும் சுயபரிசோதனையும் நிரம்பிய வாழ்க்கையை வடித்தெடுத்துத் தரும், அதிரடி மொழிதலுக்கு நேர் எதிரான, இந்தக் கூற்று அறத்தை அரசியலோடு பொருள் பொதிந்து எடுத்துரைக்கிறது. அறமும் அரசியலும் பிரிக்கமுடியாது பிணைந்திருப்பவை, ஆனால் வெவ்வேறானவை என்று அரிஸ்டாட்டிலின் காலத்திலிருந்தாவது நமக்குத் தெரியும்.

ஒரு முன்மாதிரியாகக் கொள்ளத் தகுந்த இடதுசாரிப் பாணியில் சே இவ்விரண்டையும் இணைக்கிறார். அறம் என்பதை லெவினாஸ் சொல்வதைச் சற்றே தளர்த்தி அடுத்தவருக்கான மரியாதை என்றும், அதேபோல தெர்ரிதா சொல்வதைச் சற்றே தளர்த்தி (நம்மால்) இயன்றதைப் பற்றியதான நுண்கணிதம் என்றும் புரிந்துகொள்வோம். அப்போது சே-யின் கருத்தாக்கம் வலியுறுத்துவது என்னவென்றால், ஒரு இடதுசாரி ஒவ்வொரு அநீதியின் நிமித்தமும் செயல்படாது, அல்லது அவளால் செயல்பட முடியாது போனாலும், அநீதியால் அவள் அசைக்கப்பட வேண்டும் என்பதே. சுயமோகத்தோடு கூடிய அறச்சீற்றம் அடையாள அரசியலாகவே அழைக்கப்படும்.

ஒரு இடதுசாரி செயல்படும்போது, கடினம் என்றும் இயலும்/இயலாது என்றும் கருதப்படும் எதனாலும் அவளைக் கட்டுப்படுத்த முடியாது. இவை எல்லாவற்றையும், அநீதியை, அடுத்தவர் மீதான ஒடுக்குமுறையை எதிர்த்து நிற்க வேண்டும் என்கிற அறத்தின் ஏவல், ஒரு சப்பையான தேவை, அதி-நிர்ணயம் (overdetermine) செய்துவிடும். தடுத்து நிற்பது பலனளிக்குமா என்கிற அரசியல் கணக்குக்கு இடமில்லை. தேர்வு என்பதைவிட தேவை என்பதே இடதுசாரி செயல்பாட்டின் குணாம்சம்.

வேறு வார்த்தைகளில் சொன்னால், இடதுசாரி என்பவள் யதார்த்தவாதி இல்லை, அப்படி இருக்கவும் முடியாது. புரட்சிகளோ, தேசிய விடுதலைப் போராட்டங்களோ, ஆணாதிக்கத்துக்கு எதிரான பிரச்சாரங்களோ சந்தர்ப்பவாதிகளால் உந்தப்பட்டவை அல்ல. இலங்கையில் அநீதிக்கு எதிரான தமிழர்களின் போராட்டமும் அப்படியானது அல்ல. அந்தப் போராட்டத்தின் நியாயதருமம் என்பது தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் செயல்பதிவுகளால்-- தீயவை, அதலபாதாளத்தைத் தொடுபவை அவை-- நிற்பதில்லை அல்லது விழுவதில்லை.

ஆனாலும், இதை ஒருவர் எழுதும்போது, இடதுசாரிகளில் பலர், புலிகளை இறந்தகாலத்தினராகக் கொண்டு, தமிழர்களை ஒரு “யதார்த்த” நிலைப்பாட்டை எடுக்கச் சொல்லி அறிவுறுத்துகிறார்கள்: அதாவது, ராஜபக்சே அரசிடம் பிச்சை எடுக்கச் சொல்லுகிறார்கள்: திணற அடிக்கும் அதிகாரத்தின் நிஜத்தோடு சமாதானமாகப் போகச் சொல்லுகிறார்கள். எது கிடைக்குமோ அதைப் பெற்றுக்கொள், மொத்தத்தில் சரணடை.

இதை ஒருவர் எழுதும்போது, அதே ஆட்சி ஆகாயத்திலிருந்தும் தரையிலிருந்தும் தொடர்ந்து குண்டுபோடுகிறது, விடுதலைப் புலிகளின் கையில் சின்னதொரு நிலப்பகுதி இருக்கிறது. சாதாரணத் தமிழ்க் குடிமக்கள் பத்திலிருந்து இருபது வரை தினம்தினம் கொன்றுபோடுகிறது. இன்னும் பலரை ஊனமாக்குகிறது. பல சின்னஞ்சிறு குழந்தைகள் கைகால் இழந்து நிற்கிறார்கள். அவர்கள் பத்திரமாக இருக்கலாம், விடுதலைப்புலிகள் மனசாட்சியின்றி அவர்களை மனிதக்கேடயங்களாகப் பயன்படுத்தாதிருந்தால்; அல்லது, இன்னும் மோசமாக, தப்பிக்க முயற்சிப்பவர்களை அவர்கள் சுடாதிருந்தால். ஆனால், அதை இந்த அரசின் கொடுமைக்குச் சாக்குப்போக்காகக் கொள்ள முடியாது.

ஆனாலும், இதை ஒருவர் வாசிக்கும்போது, இடதுசாரிகளின் பிரிவினரிடமிருந்து அறச்சீற்றத்தையோ, கொந்தளிப்பையோ பார்க்கமுடிவதில்லை. சாதாரண மக்களின் சாவைக்குறித்து விதிக்குட்பட்ட, மேற்கோட்குறிகளுக்குள்—அவலமான—அக்கறையின் சைகை இருக்கத்தான் செய்கிறது. ஆனால், குறிப்பிடத் தகுந்த அளவுக்கு, இந்த அரசின் கொடுமை அதற்கான நம் எதிர்வினையை வடிவமைக்கக்கூடாது, இந்த அரசு கருதிக்கொண்டிருக்கும் வெற்றியின் ”நிஜமே” வடிவமைக்க வேண்டும் என்பதாகத் தோன்றுகிறது.

உதாரணத்துக்கு இப்படியொரு கூறு காணப்படும் சுமனசிரி லியநாகேயின் கட்டுரையை எடுத்துக்கொள்வோம். ”தமிழ் ஈழ விடுதலைப்புலிகளுக்குப் பிறகான சகாப்தம்” பற்றிப் பலரும் கொண்டிருக்கும் நிலைப்பாடு ஒன்றை அது தெளிவுடன் வெளிக்காட்டுகிறது. ஆனால் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் அமைப்பை முடிந்துவிட்டதெனக் கருதுவது உண்மைபோல் வலம்வரும் ஒரு அதி-கற்பனையே (fantasy). அதன் வரலாறு மறதியை அல்ல, வளைந்துகொடுக்கும் தன்மையையே காட்டுகிறது. வலுவிழக்கச் செய்யப்பட்ட, உடைந்துபோன கொரில்லாக்கள்—இப்போதைப்போல எப்போதுமே அவர்கள் தங்களிடையே கூட புகழைத் தொலைத்ததில்லை— என்றபோதிலும், அரசியல்-ராணுவப் பரப்பிலிருந்து அவர்களின் மறைவு தவிர்க்க இயலாதது என்று சொல்லமுடியாது. இதைத் தவிர்த்துப் பார்த்தாலும், தமிழர் போராட்டத்தின் நீதி குறித்ததான இடதுசாரிகளின் கடப்பாடு, விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவிதியோடு இணைந்திருப்பது அல்ல.

நீதியோடு கூடிய அமைதிக்கான தன் கடப்பாட்டை லியநாகே பல ஆண்டுகளாக தொடர்ந்து முன்வைத்திருக்கிறார். குறிப்பாக சென்ற இரண்டு வருடங்களில் அவரது பல சிந்தனாபூர்வமான குறுக்கீடுகளை நான் பாராட்டியிருக்கிறேன். ஆனால், அவர் இப்போது இந்த ஆட்சிக்கு வெள்ளை அடிக்கும் வேலையைச் செய்கிறார். இதை நான் இழப்புற்ற உணர்வோடு சொல்லுகிறேன், கோபத்தில் அல்ல. ”புரட்சிகரமான” அரசியல் சட்ட மாற்றம் ”சாத்தியமில்லை” (unlikely)---இந்த வார்த்தை அவர் கட்டுரை முழுதும் குப்பையாக இறைகிறது—-என்று வாதிடும் அவர் யதார்த்தமான ”சீரமைப்பு” ஒன்றை நாம் எல்லோரும் ஏற்கவேண்டும் என்று பரிந்துரைக்கிறார். பதிலுக்கு ஒருவர் கேட்கலாம்: அமெரிக்க நாட்டின் அடிமைகள் தங்கள் அடிமைத்தனம் முடிவுக்கு வரும் சாத்தியம் பற்றி யோசித்துக் கொண்டிருந்திருந்தால், தங்களை மூழ்கடிக்கும் வெள்ளை ஸ்தாபனங்களின் அதிகாரத்துக்கு எதிரான வாய்ப்புகளைக் கணக்கிட்டுக் கொண்டிருந்திருந்தால், அவர்கள் கலகம் செய்திருப்பார்களா? செய்திருக்க வாய்ப்பில்லை.

நம்மால் நம்ப இயலாதபடி, இலங்கையின் மிகமோசமான இன்றைய நிலைமையின் ஒரு பகுதிக்குக் கூட பொறுப்பானதாக ராஜபக்சே-யின் ஆட்சியை ஒரு முறைகூட அடையாளப்படுத்துவதில்லை லியநாகே. மற்றவரை ஒறுத்துக் கட்டப்படும் தேசியத்தின் “முக்கிய ஆதரவாளர்கள் JVP-யும் ஹேலா உருமயா-வுமே.” SLFP இந்தக் கருத்தியலைப் பகிரவில்லை, எந்தப் பழிபாவமும் அது அறியாதது என்பதுபோல.
இதை ஒருவர் எழுதும்போது, ராஜபக்சே-யின் ஆட்சி வன்னித்தமிழர்களை மூன்று வருடம்வரை தங்கவைக்கக்கூடிய தடுப்பு முகாம்களைக் கட்டுவதைப் பற்றி அறிவித்திருக்கிறது. பள்ளிகளும் மருத்துவமனைகளும் வங்கிகளும் இந்த தடுப்பு முகாம்களுக்குள் உண்டு. சித்திரவதை முகாம்களை ஒத்த இந்த முகாம்களுக்காக நிதி உதவி கேட்டு ராஜபக்சே-க்கள் துணிச்சலோடு ஐ.நாவையும் அரசுசாரா நிறுவனங்களையும் (இதே நிறுவனங்கள்தாம் இவர்களின் பேச்சாளர்களால் களங்கப்படுத்தப்படுபவை) அணுகியிருக்கிறார்கள்.

இந்த அரசின் குறுகிய, ஆனால் மாறாது மற்றவர்களைத் தொடர்ந்து ஒறுக்கும், ஜீவனத்தை மனதில் கொண்டால், திட்டத்தின் அடுத்த கட்டம் என்ன என்பதை முன்கூட்டியே காண ஒருவர் ஜோசியராகவோ சமூக அறிவியலாளராகவோ இருக்கத் தேவையில்லை. இந்த ஆட்சி, கடந்த இரு வருடங்களாக, JHU-(ஜதிக ஹேல உருமய)-வின் சம்பிக ரணவக, பசில் ராஜபக்சே ஆகியோரின் தலைமையில் கிழக்கின் முஸ்லீம்களின் நிலங்களை திட்டம்போட்டு அபகரித்துவருகிறது. சிங்களக் குடியேற்றமும் தொலைவில் இல்லை.

தமிழர்கள் அகற்றப்பட்ட வன்னி நிலத்திலும் பின்னர் சிங்களர்களின் குடியேற்றம் நிகழும் என்பதில் கொஞ்சம்கூட சந்தேகம் இல்லை. இதுதான் தேசியக் கேள்விக்கு முன் ராஜபக்சே-க்கள் வைக்கும் “கடைசித் தீர்வு:” அரசியல் ரீதியாக, தமிழர்களை முக்கியமில்லாதவர்களாக ஆக்கிவிடு, எந்தத் தடையையும், அது அஹிம்சை வடிவத்தில் இருந்தாலும், உடல்ரீதியாக அப்புறப்படுத்தி விடு, எஞ்சியிருப்பவர்களை முகாம்களில் அடைத்துவிடு.

இதில் விவாதிக்க வேண்டிய கேள்வி ஒன்றுதான்: 1940-களின் பின்பகுதிகளின் டி.எஸ். சேனநாயகே முதற்கொண்டு இப்படியான தந்திரங்களை முறையாகக் கையாண்டுவரும் சிங்களத் தேசியம் இதை ஜியோனிஸத்திடமிருந்து (Zionism, யூதர் தாய்நாடு இயக்கம்) கற்றுக்கொண்டதா, அல்லது இஸ்ரேலியர்கள் இலங்கையை முன்மாதிரியாகக் கொண்டார்களா? 1980-களின் மத்தியிலிருந்து இந்த இரண்டு அரசுகளும் வெளிப்படையாகக் கூட்டாகச் செயல்படுகின்றன என்பது தற்செயல் அல்ல. 1980-களின் பாராளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்த மகிந்த ராஜபக்சே, பாலஸ்தீனியரின் உரிமைகளுக்காக குரல்கொடுத்த முற்போக்குவாதியாக இருந்திருக்கலாம்; ஆனால், அவர் ஆட்சி இஸ்ரேலிய அரசோடு ஒப்புநோக்கும் வகையில் இருக்கிறது.

இப்படியொரு சூழலில், சீரமைப்பு என்று ஒன்றை முன்வைப்பது, வடக்கில் எத்தனை சிங்களர்கள் குடியேறி ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கலாம் என்பதற்கான விவாதமாகவே இருக்கும். அன்றி, இப்படியான குடியேற்ற ஆதிக்கம் முதலில் நடக்கலாமா என்பதைப் பற்றியதாக இருக்காது.

ஆனால், ”சீரமைப்பு,” “புரட்சிகர மாற்றம்” போன்றவை மட்டுமே மாற்றுவழிகள் அல்ல. எதிர்ப்பு—நீதியோடு கூடிய அமைதிக்கான தளராத கோரிக்கை—மற்றொரு வழி. என்றபோதிலும், லியநாகே தன் நிலைப்பாட்டை தந்திரமான இத்தகைய பேச்சுப்பாணிக்குள்ளேயே வைக்கிறார். என்ன, சீரமைப்பு யதார்த்தமாகவும் இயலக்கூடியதாகவும் காரணம் சொல்லக்கூடியதாகவும் இருக்கிறது. அதற்கு மாற்றான புரட்சிகர மாற்றம் நியாயமானதல்ல. ஏனென்றால், லியநாகே ஒருவேளை அறியாமலேயே மறு உற்பத்தி செய்யும் ஜார்ஜ் டபிள்யூ புஷ் புனைந்து உருவாக்கிய உலகநோக்கில், புரட்சியாளர் என்பதன் அர்த்தம் பயங்கரவாதி தான்.

ஆம், விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் என்று குற்றஞ்சாட்டமுடியும், அந்தச் சொல்லை ஒருவர் பயனுள்ளதாக எண்ணினால். தேசிய விடுதலை இயக்கங்களிலேயே அதன் கொடுமையை வேறு எந்த இயக்கத்தோடும் ஒப்பிடமுடியாது. மிக நன்றாகவே அறியப்பட்ட அதன் வரலாற்றை இங்கே திருப்பிச்சொல்ல தேவையில்லை. விடுதலைப்புலிகளும் அதன் தலைமையும் போர்க்குற்றங்களுக்கான விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்ற வாதத்தை பலமாகவே வைக்கமுடியும். ஆனால், நிச்சயமாக, அதே அளவுக்கு, சமமான, பலமான வாதத்தை இந்த அரசை நடத்திச் செல்லுபவர்கள் பற்றியும் வைக்கமுடியும்.

அதே நேரத்தில், ஆட்சியோடு உரையாடல் வைத்துக்கொள்ளவேண்டும் என்று ஒருவர் வாதிடும்போது, ஏன் அவர் அதை விடுதலைப்புலிகளோடும் செய்யவேண்டும் என்று வாதிடக்கூடாது? கருத்தியல்ரீதியாக இரண்டுமே அடுத்தவரை விலக்கும், ”வரம்பற்ற” என்று சொல்லமுடியாவிட்டாலும், தீவிர தேசியத்தை தம் உருவமாகக் கொண்டிருக்கின்றன. இரண்டுமே மாற்றுக்கருத்தைத் துரோகமாகப் பார்க்கின்றன. லசந்த விக்ரமதுங்கே-யின் கொலைக்குப்பின் கோதபாய ராஜபக்சே உண்மையிலேயே இதை BBC தொலைக்காட்சிக்குச் சொல்லியிருக்கிறார். கே.பத்மநாபா, ரஜினி திரநகாமா உட்பட எதிர்ப்பை முன்வைத்தவர்களை விடுதலைப்புலிகள் அமைப்பு திட்டமிட்டுக் கொலைசெய்து வந்திருக்கிறது. என்ன வித்தியாசம், விடுதலைப்புலிகளின் கொடுமை பத்தாண்டுகள் கணக்காகத் தொடர்ந்து நீண்டுகொண்டிருக்கிறது என்பதுதான். எளிமையாகச் சொன்னால், இன்னும் அதிகமானோரை அது கொன்றிருக்கிறது, மிரட்டியிருக்கிறது, அழித்திருக்கிறது. ஆனால் எண்களின் கணிப்பு இடதுசாரி அறத்தைத் தீர்மானிக்கக்கூடாது.

லியநாகே-வுக்கு இது தெரியும். அவர் தமிழர்களையும் முஸ்லீம்களையும் “சிறுபான்மையினர்” என்று அழைக்க விரும்பாமல் “எண்ணிக்கையில் குறைந்த தேசத்தினர்” என்று குறிப்பிடுகிறார். ஆனாலும் அவரால் தன் நிலைப்பாட்டை எண்களின் தர்க்கத்துக்கு வெளியே வைக்க முடியவில்லை. தெர்ரிதாவுக்குப் பிறகு ஒருவர் கேட்க முடியும்: எந்த எண்ணிக்கையில் ஒரு தேசம் சிறியதாகிறது அல்லது பெரியதாகிறது? இடைப்பட்ட அளவுக்கும் நமக்கொரு கூண்டு தேவையா? சீனர்கள் என்பது மிக-அதிக அளவா? சமூக அறிவியலாளர்களுக்கே கிடைக்கிறமாதிரி இவற்றுக்கான சரியான விதிகளையும் பதில்களையும் கொண்ட ரகசியப் புத்தகம் ஏதும் இருக்கிறதா?

மிக முக்கியமாக, இது பொருட்படுத்தப்பட வேண்டிய ஒன்றா? தமிழர்களின் (ஏன் அதேபோல பாலஸ்தீனியர்களின்) ஒடுக்குமுறையால் நாம் அசைக்கப்படுகிறோம், கோபப்படுகிறோம், மலைக்கிறோம் என்கிற உண்மைக்கு இந்த எண்ணிக்கையோடு என்ன தொடர்பு இருக்கிறது? அறச்சீற்றம் என்பது நம் எதிர்வினைக்கான ஏவுகளமாக இருக்கக்கூடாதா?
(இரண்டாம் பகுதி பின்னர் வெளிவரும். தவிர்க்கமுடியாத வேலைப்பளுவால் மொழிபெயர்ப்பை இப்போதைக்குத் தொடர முடியவில்லை.)

1 comment:

Osai Chella said...

அருமையான செய்திகளுக்கு நன்றி! தொடருங்கள்!