Sunday, March 1, 2009

கிருத்திகா: ஒரு கடிதமும் பதிலும்

”கிருத்திகா: அஞ்சலி” என்கிற தலைப்பில் ஜெயமோகன் கட்டுரை ஒன்றை தன் வலைத்தளத்தில் பதிவேற்றியிருந்தார். கட்டுரையில் சில விஷயங்களைச் சுட்டி நான் எழுதிய கடிதத்தையும் அவர் பதிலையும் இங்கே காணலாம். ஜெயமோகனைப் பொறுத்தவரை அவரது நல்ல குணம் ஒன்றைச் சொல்ல வேண்டும். அவர் தான் மேற்கொண்டிருக்கும் பல்வேறு எழுத்துவேலைகளுக்கு நடுவிலும் கடிதங்களுக்கு உடனே பதில்போடக்கூடியவர். இக்கடிதத்துக்கும் பதில் உடனே வந்தது.

பெண்ணியர்கள் நிறைய எழுத வேண்டும், பெண்ணிய வாசிப்பை பரவலாக்க வேண்டும் என்ற கருத்தோடு எனக்கு உடன்பாடே. பெண்ணிய வாசிப்பைத் தவிர்த்துப்பார்த்தாலும், ஆண்களோடு ஒப்பிடுகையில் பொதுவாகவே தமிழில் காத்திரமான கட்டுரைகளை எழுதும் பெண்களின் எண்ணிக்கை மிகக்குறைவே. இதைக்குறித்த வருத்தம் எனக்கும் உண்டு.

ஆனால், என் கேள்வி என்னவென்றால், கிருத்திகா போன்ற எழுத்தாளர்களைப் பற்றி ஏன் பெண்கள் அல்லது பெண்ணியர்கள் மட்டுமே எழுதவேண்டும்? கிருத்திகாவின் எழுத்து “பெண்” என்கிற பிரதிநிதித்துவ தொகுதியைத் (representative constituency) தாண்டியது என்றே நினைக்கிறேன். தி. ஜானகிராமனையும், மௌனியையும், சுந்தரராமசாமியையும், நகுலனையும் பற்றி கட்டுரைகள் எழுதப்படும்போது கிருத்திகா ஏன் விவாதிக்காமல் விடப்பட்டிருக்க வேண்டும் என்பதுதான் கேள்வி. இதற்கான காரணமாகத்தான் இலக்கிய ஆண்மையச் சூழலை நான் குறிப்பிட்டேன். அடிப்படையில், ஆண்குழுக்களின் வலைப்பின்னல்களும் அவற்றுக்கிடையேயான தொடர்புறவுமே “சிறந்தது” என்று ஒரு படைப்பை நிறுவி அதை canonize செய்து இலக்கிய அங்கீகாரத்தைப் ”பெற்றுத்” தருகின்றன. மேலும் Canonization நடக்காதவரை ஒரு படைப்பை எழுத்தாளரின் குடும்பத்தினரே எடுத்து மீள்-பதிப்பித்தாலும்தான் என்ன பயன் ஏற்படப்போகிறது? இலக்கியத்தை தொடர்ந்து பிரசுரித்துவரும் ஒரு நிறுவனமோ அமைப்போ மீள்-பிரசுரம் செய்வதற்கும் எழுத்தாளரின் குடும்பத்தினர் அதைச் செய்வதற்கும் எத்தனை வேறுபாடு? இரண்டும் ஒன்றா என்ன?

பெண்கள் தமக்கான வலைப்பின்னல்களை நிறுவி பெண் எழுத்தாளர்களை முன்னெடுத்துச் செய்யலாமே என்று ஒருவேளை ஜெயமோகன் கேட்கலாம். அதற்கு என் பதில் இதுதான்: அதற்கு காத்திரமான எழுத்துகளில் தொடர்ந்து ஈடுபடும் உற்சாகமும் முனைப்பும் பயிற்சியும் கொண்ட நிறைய பெண் எழுத்தாளர்கள்/கட்டுரையாளர்கள் தேவை. மேலும் அவர்கள் இந்த ஆண்-வலைப்பின்னல்களூடே செயல்படும் காரிய, காரணார்த்த அரசியல்களை விளையாட்டாகத் தாண்டிச்செல்லும் பக்குவமும் பெற்றிருக்க வேண்டும்.
இதற்கெல்லாம் இன்னும் கொஞ்சம் காலம் ஆகும் என்றுதான் தோன்றுகிறது.

அதேநேரத்தில் எழுத்தாளர்கள் பெண்களாக இருக்கும்போது அவர்களின் எழுத்துகளைப்பற்றி மற்ற பெண் எழுத்தாளர்களோ பெண்ணியம் பேசுபவர்களோதான் எழுத வேண்டும், அவற்றைப் பரிந்துரைக்க வேண்டும் என்பதில்லை என்றே கருதுகிறேன். அதேபோல, இலக்கியத்தைப் பொறுத்தவரை பெண்ணிய வாசிப்பு என்பது மார்க்ஸிய வாசிப்பு, அமைப்பியல் வாசிப்பு, பிறகான/பின் நவீனத்துவ வாசிப்பு போன்ற ஒரு சிந்தனைப்போக்கு. இலக்கிய எழுத்தை பலவிதங்களில்--பெண்ணியத்தை சுவீகரித்தோ அல்லது அதைக் கொஞ்சம் தள்ளிவைத்தோ-- பெண்களும் சரி, ஆண்களும் சரி வாசிக்கலாம், எழுதலாம். அந்தவகையில் கிருத்திகாவின் எழுத்தும் பிற பெண் முன்னோடிகளின் எழுத்தோ இருபாலினரின் பல்வகைப்பட்ட பார்வைக்கும் ஆய்வுக்கும் உகந்தவையே.

என் கடிதமும் ஜெயமோகனின் பதிலும் இதோ:

அன்புள்ள ஜெயமோகன்,

உங்கள் "கிருத்திகா: அஞ்சலி" கட்டுரையை வாசித்து ஆச்சரியமும் வருத்தமும் அடைந்தேன். அந்தக்கட்டுரையில் இருக்கும் தகவல் பிழைகளை உங்கள் பார்வைக்கு கொண்டுவர விரும்புகிறேன். "பெண்ணியம் வந்தபின் கிருத்திகா மறுவாசிப்புக்கு ஆளாகியிருக்க வேண்டும்" என்று சொல்லியிருக்கிறீர்கள். "வாசிக்கும் பழக்கம் கொண்ட பெண்ணியர்கள் நானறிந்தவரை தமிழில் யாருமில்லை" என்றும் நிதானமின்றிக் கூறியிருக்கிறீர்கள். கிருத்திகாவின் வாஸவேச்வரம் நாவலில் இயல்மொழி செயல்படும் விதம்பற்றி பத்துவருடங்களுக்கு முன்பே காலக்குறி (மார்ச் 1999) இதழில் வெளிவந்த "கதையுலகில் தமிழின் இயல்மொழி" என்கிற கட்டுரையில் நான் எழுதியிருக்கிறேன். எனினும் கிருத்திகாவின் நாவல் தமிழில் பரவலாக விவாதிக்கப்படாததாலும் பெண்ணிய வாசிப்பை முன்வைக்க வேண்டும் என்று கருதியதாலும் இந்நாவலைப் பற்றி மீண்டும் ஒரு விரிவான கட்டுரையை எழுதினேன். வாஸவேச்வரம் நாவலில் மூன்றாம் பதிப்பின் (காலச்சுவடு, செவ்விய நாவல்கள் வரிசை, 2007) முன்னுரையாக அக்கட்டுரை இடம்பெற்றிருக்கிறது. என் பதிவிலும் www.innapira.blogspot.com நவில்தொறும் நூல்நயம் பகுதியில் சென்ற ஆண்டில் அது பதிக்கப்பட்டிருக்கிறது. பொதுப்படையாக ஒரு காட்டமான விமரிசனத்தை வைக்கும்போது தகவல்களை உறுதிசெய்துகொண்டு நீங்கள் எழுதியிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

மேலும், "கிருத்திகாவின் மகளுக்கும் அவர்களின் மாபெரும் அமைப்புக்கும் தமிழின்மீது பெரிய மதிப்பு இல்லாத காரணத்தால் அவர்கள் கிருத்திகாவை ஒரு தமிழ் எழுத்தாளராக முன்னிறுத்தவில்லை. ஆகவே அவரது நூல்கள் இன்று கிடைக்கவே இல்லை. எவராவது ஆர்வம் எடுத்து அவற்றை வெளியிடலாம்" என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். நான் அறிந்தவரை, கிருத்திகாவின் மகள் மீனா அவர்கள் தமிழில், நவீன இலக்கியத்தில் ஆர்வம் உடையவர். பணிகளுக்கு இடையிலும் புதிய கவிதைநூல்களை, புதினங்களை வாங்கி வாசிக்கக்கூடியவர். வெண்ணிலா மற்றும் சுகிர்தராணியின் கவிதைகளை, கோணங்கியின் எழுத்துகளை அவர் என்னோடு விவாதித்தது இப்போதும் என் நினைவில் இருக்கிறது. அதேபோல, காலச்சுவடு பதிப்பகம் வாஸவேச்வரம் நாவலை பிரசுரிக்க நினைத்து மீனாவை அணுகியபோது உடனே தன் தாயிடம் பேசி--அப்போது கிருத்திகா நினைவையும் மறதியையும் மாறிமாறிக் கொண்டிருந்த நேரம்--நாவல் பதிப்பு பெற உதவி செய்தார். இது உங்கள் தகவலுக்கு.

கிருத்திகா முன்னணித் தமிழ் எழுத்தாளராக இதுவரை அறியப்படவில்லை என்றால், அவரது புத்தகங்களின் பதிப்புகள் வெளிவரவில்லை என்றால், அதற்கான பழியை தமிழ் நவீன இலக்கியச் சூழலில் நின்று நிலைபெற்றிருக்கும் ஆண்மையச் சூழல் தான் ஏற்கவேண்டுமே தவிர அவர் குடும்பமல்ல. இது கிருத்திகாவுக்காக மட்டும் நான் சொல்லவில்லை. எந்த எழுத்துமே இலக்கியச் சூழலால்தான், அதில் தீவிரமாக இயங்குபவர்களால்தான் அவர்களிடையே நேரும் விவாதங்கள், உரையாடல்களின் வாயிலாகத்தான் canonize செய்யப்படுகிறது, நல்ல எழுத்தாக வகைமைப்படுத்தப்படுகிறது, வாசகர்களுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது, வாசகர்கள் விரும்பினால் பதிப்புகள் காண்கிறது. கிருத்திகாவின் எழுத்து ஏன் இத்தகைய கவனம் பெறவில்லை என்ற கேள்வியை இலக்கியத்தில் இயங்குபவர்கள், இயங்கியவர்கள் தங்களிடமேதான் கேட்டுக்கொள்ளவேண்டும், இந்தக்கேள்வியின் பதில் எழுத்துலகின் அரசியலை நாம் விரும்பாவண்ணம் நமக்கே காட்டித்தந்தாலும்.
அன்புடன்
பெருந்தேவி

*****

அன்புள்ள பெருந்தேவி,

மன்னிக்கவும். உங்கள் கட்டுரைகள் என் கவனத்துக்கு வரவில்லை. என்னுடைய கூற்று சற்று பொத்தாம்பொதுவாக அமைந்துவிட்டது குறித்து வருத்தமே. அது ஒரு பொதுவான மனப்பதிவே. நான் பழகிய பெரும்பாலான பெண்ணியர்கள் முன்னோடிகளின் நூல்களை போதுமான அளவுக்கு வாசித்தது இல்லை என்பதுடன் சிலர் அவ்வாறு வாசிக்கதேவையில்லை என்றும் சொல்லியிருக்கிறார்கள்.

இன்று நமக்கு எப்படிபபர்த்தாலும் ஒரு ஆயிரம் பக்க பென்ணிய எழுத்துக்கள் கிடைக்கின்றன. அவற்றில் மேலைநாட்டுப்பெண்ணிய எழுத்தாளர்கள் - எடித் வார்ட்டன், வெர்ஜீனியா உல்ப், சீமோங் த பூவா முதல் இன்றுள்ளவர்கள் வரை-- பற்றிய எத்தனை பக்கங்கள் உள்ளன என்று எவரும் பார்க்கலாம். வை.மு.கோதைநாயகி ஆர்.சூடாமணி முதல் இன்றுவரையிலான எழுத்தாளர்களைப்பற்றி புதிய கோணத்தில் தமிழ்ப்பெண்ணியர் எத்தனை பக்கங்கள் எழுதியிருக்கிறார்கள்? அந்த ஏமாற்றத்தின் பதிவே அது.

நீங்கள் எழுதியிருக்கிறீர்கள்-- மேலும்எழுதுவீர்கள் என்றால் அது மகிழ்ச்சிகரமானதே. ஆனால் அப்படி பெண்ணியர்கள் ஏதும் எழுதாதற்கும் ஆணியவாதிகள்தான் காரணம் என்றால் என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று மட்டும் சொல்லிக்கொள்கிறேன். ஆணியவாதிகள் ஆணியவாதிகளாக இருப்பதனால் பெண்ணெழுத்துக்களைப் பற்றி எழுதவில்லை. சரி, ஏன் பெண்கள் அவர்களைப்பற்றி விரிவாக எழுதி ஒரு மாற்றத்தை உருவாக்கக் கூடாது என்பதே என் கேள்வி. அதுதானே இயல்பானது?

மீனா சாமிநாதனைப்பற்றிய உங்கள் தகவல் புதிய செய்தி எனக்கு. அவரது இடத்தில் இருந்திருந்தால் நான் கிருத்திகாவின் படைப்புகளை அனைத்தையும் சிறந்த பதிப்புகளாகக் கொண்டு வந்திருப்பேன். அதுவே எனக்கு தமிழ் மீதான பற்றின் மதிப்பின் ஆதாரமாக இருந்திருக்கும்

ஜெ

5 comments:

Unknown said...

//எழுத்தாளர்கள் பெண்களாக இருக்கும்போது அவர்களின் எழுத்துகளைப்பற்றி மற்ற பெண் எழுத்தாளர்களோ பெண்ணியம் பேசுபவர்களோதான் எழுத வேண்டும், அவற்றைப் பரிந்துரைக்க வேண்டும் என்பதில்லை என்றே கருதுகிறேன்.// இதைக் கட்டாயம் வழிமொழிகிறேன். இன்னும் ‘வலைப்பின்னல்கள்’ வேண்டாம். (ஜெயமோகன் எழுதியது பெண்ணிய வாசிப்பைப் பற்றிய பொதுவான கருத்து என்றே நான் புரிந்து கொண்டேன்).

//அரசியல்களை விளையாட்டாகத் தாண்டிச்செல்லும் பக்குவமும் பெற்றிருக்க வேண்டும்.
இதற்கெல்லாம் இன்னும் கொஞ்சம் காலம் ஆகும் என்றுதான் தோன்றுகிறது. // கொஞ்ச காலமா? உங்கள் பக்கத்து கோப்பை பாதியேனும் நிரம்பியே இருக்கிறதா;-)

இன்னும் அடிக்கடி எழுதுங்களேன்.

Perundevi said...

றஞ்சினி, உங்கள் விரிவான பின்னூட்டம் கிடைத்தது. நன்றி. நீங்கள் அவசரமாக எழுதியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். சில அச்சுப்பிழைகள் இருக்கின்றன. திருத்தி அனுப்பமுடியுமா? உங்களுக்கு மின்மடல் அனுப்ப நினைத்தேன். ஆனால் உங்கள் மின்மடல் முகவரி தெரியவில்லை. முடிந்தால் உங்கள் முகவரியை என் ஜீ மெயில்-க்கு அனுப்பவும்.
பெருந்தேவி

Perundevi said...

எழுத்தாளர் ஜெயமோகனுக்கு இந்தப் பதிவு பற்றி எழுதியிருந்தேன். அவரிடமிருந்து வந்திருக்கும் பதில் கீழே:

“உங்கள் கட்டுரையை படித்தேன். நல்லது, தொடர்ந்து தரமான எழுத்துக்கள் வந்தால் வரவேற்கத்தக்கதுதான் அது

என்னைப்பொறுத்தவரை என்னை கவர்ந்த பெண் எழுத்தாளர்களை-- அவர்கள் எழுத்தாளர்கள் என்பதற்காகவே -- எப்போதும் பேசிக்கொன்டிருக்கிறேன். எந்த எழுத்தாளருக்கும் நிகராக குர் அதுல் ஐன் கைதரை நான் பேசிக்கொண்டிருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம்

தமிழ் பெண் எழுத்தாளர்கள் இலக்கியம் என்ற விரிவான பேசுதளத்தில் ஒரு பகுதியை நிரப்புகிறவர்கள் மட்டுமே. என்னை தனிப்பட்ட முறையில் கவர்ந்தவர்கள் அல்ல-- கிருத்திகா உட்பட. என் சொந்த வாழ்க்கையின் ஆழங்களுக்குள் நுழைந்த என் ஆழ்மனத்தை தூண்டிய ஒரு படைப்பாளியே என் எழுத்தாளர். அவரையே நான் முக்கியமாக எழுதுவேன். அப்படிப்பட்ட பெண் எழுத்தாளர் தமிழில் இப்போதைக்கு யாருமில்லை
ஜெ”

றஞ்சினி said...

வாசிப்புப்பழக்கமுள்ள பெண்ணியவாதிகள் இல்லை என்பதை முற்றுமுழுதாக ஏற்க்க முடியுமா .... ..
இதற்க்கு ஆண்களும் காரணமென்பதை ஏற்க்க மறுக்கும் பல எழுத்தாள ஆண்களின் துணைவிகள்..நண்பிகள் ( அவர்கள் விரும்பினால் ) எந்தளவு வாசிப்பதற்க்கும் எழுதுவதற்க்கும் ஏற்ற மனநிலையில் சூழலில் இருக்கிறார்கள் என்பதும் தெரியவில்லை..இப்பெண்களின் உதவிஇல்லாவிட்டால் பல எழுத்தாள ஆண்கள் இருந்திருக்க முடியுமோ என்றுதான் தோன்றுகிறது ..

எமக்கென்று ஒரு அழவுகோல்களுடன் திரியும் ஆண்கள், இப்படித்தான் பெண் எழுத்தோ ,பெண்ணியமோ இருக்கவேண்டுமென்பதில் கவனமாக இருப்பதால் பல பெண்களின் எழுத்துக்களும் பெண்ணியமும் இவர்களின் கண்களுக்கு பட்டும் படாமல் போய்விடுகிறது. தீவிரமான பெண்ணிய எழுத்துக்கள் பலரால் நிராகரிக்கப்படுகிறது. அல்லது சிலர் அதை ஏற்றாலும் மற்றவர்கள் தம்மையும் ஓரம்கட்டிவிடுவார்கள் என்பதால் மெளனம் சாதிக்கிறார்கள் ..ஒருசில பெண்களின் எழுத்துக்கள் அழுது வடிவனவாக மட்டும் இருப்பதால் ( அதற்க்காக இப்பெண்களின் எழுத்தை நான் குறைத்து மதிப்பிடவில்லை ... என்னைப்பொறுத்தவரை நாம் அழுவதைவிட்டு அதற்க்குமேல் போகவேண்டும் பல விடயங்களைத்தொடவேண்டும் என்று விரும்புபவள் ) ஆண்களின் அழவுகோல்களுக்குள் அது சரியாக இருக்கிறது.. இப்பெண்களின் எழுத்துக்களை ஊக்கிவிப்பவர்களாக தம்மைக்காட்டி பெண்ணியம் பேசமுடிகிறது .. ...ஒரு பெரிய அண்ணா ஸ்தானத்தை பெண்கள்மீது எப்பவும் இவர்கள் வைத்திருக்கவே விரும்புகிறார்கள் ..அல்லது சில பெண்ணெழுத்துக்கள் வேறுவழியின்றிய கட்டாயத்தால் ஏற்றுப் பேசப்படுவதாகவே இருக்கிறது ..

இருப்பினும் பெண்களுக்கு காலம்காலமாக ஏற்ப்பட்ட குடும்ப பிறசூழலினால் பெண்கள் முதலில் பல விடயங்களில் தம்மை நிலைநாட்ட போராடவேண்டியிருப்பது எமது நாடுகளில் மட்டுமல்ல மேற்குலக நாடுகளிலும் இதே நிலைதான் ..இங்கும் ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண் எழுத்தாளர்கள் தத்துவவாதிகள்,பெண்ணியவாதிகள் குறைவாகவே உள்ளனர் ..இது இந்த நூற்றாண்டிலும் உலகம் முழுக்க உள்ள ஒரு பிரச்சனையாகவே உள்ளது .. மேற்க்கு உலக நாடுகளிலும் ஒரு பெண் தலைமையை ஏற்பதோ அவர்களின் கருத்துக்களுக்கு இடமளிப்பதோ குறைவாகத்தான் இன்னும் இருக்கிறது .. .

ஆண்கள்போல் மேசையில் இருந்து பிறவிடயங்களின் தாக்கமில்லாமல் படித்துக்கொண்டும் ,எழுதிக்கொண்டும் இருக்கும் மனநிலையில் பெண்கள் இன்னும் இல்லை என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம் ...
என்ன இருப்பினும் ஆழமான பெண் எழுத்துக்கள் குறைவாகவே இருப்பது வேதனைதான் ..
நீங்கள் கூறியதுபோல பெண்களின் எழுத்தை பெண்கள் மட்டுமோ ஆண்களின் எழுத்தை ஆண்கள் மட்டுமோ எடுத்துவரவேண்டுமென்பதில்லை.

வேதனை என்னவெனில் இன்னமும் பெண் எழுத்தோ பெண்மொழியோ பெண்ணினால் வெளிவரும் எதுவாகிலும் ஆண்களின் அங்கிகாரத்தைப் பெற்றுத்தான் பிரபலமோ அல்லது அது ஒரு இலக்கியமாகவோ பெண்ணியமாகவோ அங்கிகாரிக்கப்படவேண்டும் ஏற்க்கப்ப்டவேண்டும் என்பது இந்த நூற்றாண்டிலும் எமக்கு ஏற்பட்டிருக்கும் ஒரு இழுக்குத்தான் ..

Perundevi said...

மேலே பின்னூட்டத்தில் இட்டிருக்கும் ஜெயமோகனின் கடிதம் குறித்து:

தமிழ்ச்சூழலில் ஜெயமோகனின் மனம்கவர்ந்த, அவர் ஆழ்மனத்தைத் தூண்டிய பெண் எழுத்தாளர் யாருமில்லை என்று சொல்லியிருக்கிறார். அது அவர் அபிப்பிராயம். ஆனால், அவரைப் போலவே மற்றவர்களும் அப்படியொரு அபிப்பிராயத்தைக் கொள்ள உரிமை உண்டு அல்லவா?
அவரது முந்தைய கடிதத்தில் (இந்த இடுகையில் பதிவிடப்பட்டிருக்கிறது)
”வை.மு.கோதைநாயகி ஆர்.சூடாமணி முதல் இன்றுவரையிலான எழுத்தாளர்களைப்பற்றி புதிய கோணத்தில் தமிழ்ப்பெண்ணியர் எத்தனை பக்கங்கள் எழுதியிருக்கிறார்கள்? அந்த ஏமாற்றத்தின் பதிவே அது” என்று எழுதியிருக்கிறார் ஜெயமோகன்.

தமிழ்ச்சூழலில் பெண் எழுத்தாளர்களின் எழுத்து பெண்ணியம் பேசும் ஒரு பெண்ணுக்கு (ஜெயமோகனைப் போலவே) ஈர்க்கவில்லை என்றால், எழுத்தாளர் பெண் என்பதாலேயே பெண்ணியம் பேசுபவர் அதை ஏன் சுமந்து செல்ல வேண்டும்? அடுத்ததாக, ஜெயமோகனின் மனத்தைக் கவராத ஒரு எழுத்தைப் பற்றி அடுத்தவர் எழுதினால் அவருக்கு என்ன, எழுதாவிட்டால்தான் என்ன? பெண்ணியர்கள் அவர்களின் முன்னோடி எழுத்தாளர்களின் எழுத்தைப் பற்றி எழுதவில்லை, ஆராயவில்லை என்றொரு விஷயத்தை அவர் முன்வைத்ததாலேயே, எழுத்து ஆண்/பெண் என்ற பால்பேதங்களுக்கு அப்பாற்பட்டது என்று என் கருத்தை நான் எழுத நேரிட்டது.