Wednesday, June 25, 2008

நடுச்சாமத்தில்

காற்று சிலசமயம்
சூனியக்காரி
..........................சேகரித்த
கபாலங்களிலிருந்து
அவள் எறிவது
வளைந்த நகைப்பை.
இருள் சிலசமயம்
பிச்சியின்
..........................விழிகள்
அவற்றில்
சுரப்பிக்கின்றன
கேளாத சுவைகளை.
படுக்கை சிலசமயம்
..........................வரையப்படாத கடலின்
எழுச்சி இன்னும்
இரைக்குக் காத்திருக்கும்
பளிங்குச்சுறா
ஒரு அரைவட்டம்.
மாத்திரைகள் சிலசமயம்
..........................முளைவிக்கும்
பொறுப்பான மறுநாளில்
யாரும்
பதிலற்ற சூரியனோடு
உரையாடத் தேவையில்லை.

2 comments:

ஜமாலன் said...

இதென்ன புள்ளிக் கவிதையா? வரைமொழியை நீங்களே முன்வைப்பதைப் பொல உள்ளது. இருந்தாலும் அந்த புள்ளிகளை நடுச்சாமத்தில் என்று பொருத்திப் பார்த்தால் கவிதை புரிவதைப்போல உள்ளது.

பேய்க்காமம் பற்றிய கவிதையா? அல்லது பேய்க்காதலா? ஆமாம் இந்த பிளாஷ்டிக் உலகில் பேய்க்காமம்தான் கொஞ்சமாவது உடலை உணர்த்தும் போலிருக்கிறது.

கவிதையின் வரிகளுடாக உருமாறும் சூனியக்காரி-பிச்சியாகி-பெண்ணாகி-மாத்திரைகள உட்கொள்ளும் பிளாஷ்டிக்காக மாறுவிடுகிறாள் என நினைக்கிறேன். பண்டைய சூன்யக்காரிகள் என்பவர்கள் மிகுக்காமத்திற்கான மருத்தவர்கள் என்பதால் எனக்கு கவிதை இப்படியொரு தோற்றத்தை தந்திருக்கலாம்.

அது என்னங்க வளைந்த நகைப்பு? மலையாளத்தில் வளி்ச்ச சிரிப்பு என்பதுபொல..

இரைக்கு காத்திருக்கும் பளிங்குச்சுறா? தமிழவனின் வான்-சூயியை நினைவுட்டுகிறது.

Perundevi said...

இப்படியும் வாசிக்கமுடியுமோ? எனக்கென்னவோ அந்தப்புள்ளிகள் முடிவறா எண்ணிக்கைகளைச் சுட்டின. ஆயிரமாயிரம் கபாலம், கடல், விதைகள் என்பன போல. நன்றி ஜமாலன் விரிவான பதிவுக்கு.