Saturday, May 3, 2008

ஆண்டாள்

ஆண்டாளின் நாச்சியார் திருமொழி கவிதை:

உள்ளே யுருகி நைவேனை
உளளோ இலளோ வென்னாத,
கொள்ளை கொள்ளிக் குறும்பனைக்
கோவர்த் தனனைக் கண்டக்கால்,
கொள்ளும் பயனொன் றில்லாத
கொங்கை தன்னைக் கிழங்கோடும்
அள்ளிப் பறித்திட் டவன்மார்வில்
எறிந்தென் அழலை தீர்வேனே.


சிலப்பதிகாரத்தின் பரிச்சயம் இல்லாமல் ஆண்டாள் இதை எழுதியிருக்க முடியுமா என்பது சந்தேகம்தான். மாதவியோடு சென்றபோது கண்ணகி உளளோ இலளோ என்ற நினைப்பில்லாமல் இருந்தவன் கோவலன். திரும்ப வந்தவுடன் "ஊழ்வினை உருத்தி" கண்ணகியோடு மதுரை சென்று கொலையுறுகிறான். பிய்த்தெறிந்த முலையிலிருந்து எழும்பிய தீ மதுரையை எரிக்கிறது.

கோவர்த்தனின் பிரிவில் தாபமுறும் ஆண்டாளின் கவிதைசொல்லியும் முலையைப் பிய்த்தெறியப்போவதாகச் சொல்கிறாள். கோவர்த்தன மலையைக் கண்ணன் தூக்கியது கோகுலத்தில். அவனைப்பிரிந்த கோபியரின் தாபமும் கவிதைசொல்லியின் தாபமும் ஒன்றே போல.

கோவலனின் பிரிவு தந்த துயரத்தின் கண்ணீர் கண்ணகியின் முலையை வெந்தழலாக மாற்றுகிறது. ஆண்டாளின் கவிதையிலோ, கோவர்த்தனின் நெஞ்சோடு முலை சேர, அது தாபத்தின் அழலை அணைக்கக்கூடிய நீராக மாறுகிறது.

சிலப்பதிகாரத்தில் பொது வெளியில் (public space) அறமெனும் தீ அழலாகக் காட்சியாகிறது. ஆண்டாளின் கவிதையில், பிரத்யேக வெளியில் (private space) சேரக்கிடைக்க, கொழுந்துவிட்ட காதலின் அழல் அமைதிபடுகிறது.

கோவர்த்தனனுக்கும் கோவலன் என்றொரு பெயர் உண்டு என்று நினைக்கிறேன்: "கொண்டல் வண்ணனை, கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயனை, என் உள்ளம் கவர்ந்தானை" என்ற பாசுரம் நினைவில் வருகிறது.

வாசிக்க வாசிக்க இன்பம் தருகிறது ஆண்டாள் கவிதை.

1 comment:

ஜமாலன் said...

இந்தவகை இடையீட்டுப் பிரதிகள் பற்றிய ஆய்வு அவசியமானவை.

முலையை அறுத்தெறிதல் என்பது குறித்து..
1. சதாத்ஹசன் மண்டோவின் ஜமிலா கதையில் வரும் ஜமிலா என்கிற இஸ்லாமிப்பெண்

2. புதுமைபித்தனின் வழித்துணையில் வரும் இந்துப்பெண்

3. கண்ணகி

4. நீங்கள் குறிப்பிட்டுள்ள அண்டாளின் கவிதை சொல்லி..

இது ஒரு ஆச்சர்யமான உள்தொடர்புதான். முலைகள் என்பது ஒரு பாலியல் ஆற்றலின் குறியீடாகவே இவற்றில் உள்ளது. இது குறித்து விரிவாக பேசவேண்டும்.

மன்னிக்கவும் உங்கள் பதிவில் உள்ள இந்த ஒற்றுமையால் இதை சுட்டினேன்.